top of page

வெள்ளி, மார்ச் 28 || நியாயத்தீர்ப்பு நிச்சயமானது!


என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; ... - யோவான் 5:24


வேதம் நியாயத்தீர்ப்பை, ஒவ்வொரு மனிதனும் மரணத்துக்குப்பின் சந்திக்கவேண்டிய ஒரு மெய்யான நிகழ்வென்று கூறுகிறது. ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்று எபிரெயர் 9:27 கூறுகிறது. மேலும் 2 கொரிந்தியர் 5:10, நாம் சரீரத்தில் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும் என்று கூறுகிறது. அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை என்று கொலோசெயர் 3:25ல் வாசிக்கிறோம்.  நமது ஆண்டவர் இயேசுவும், இதோ சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று வெளிப்படுத்தின விசேஷம் 22:12ல் கூறியிருக்கிறார். 


நியாயத்தீர்ப்பின் காட்சி எப்படியிருக்கும் என்பதை வெளிப்படுத்தின விசேஷம் 20:11-15 வெளிப்படுத்துகிறது. வெள்ளை சிங்காசனம், அதில் அமர்ந்திருக்கும் ஆண்டவர் இயேசுகிறிஸ்து; மரித்தோராகிய அனைவரும் அவருக்கு முன்பாக நிற்கிறார்கள்; புஸ்தகங்கள் திறக்கப்படுகின்றன, ஜீவபுஸ்தகமும் திறக்கப்படுகிறது; அதில் எழுதப்பட்டிருக்கிறபடியே யாவரும் நியாயத்தீர்ப்படைகிறார்கள். ஜீவபுஸ்தகத்திலே பேரெழுதப்படாதவர்கள் அக்கினிக்கடலிலே தள்ளப்படுகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருப்போம். அவரை நாம் நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நாம் ஆக்கினைத் தீர்ப்படைவதில்லை. (ரோமர் 8:1) ஆனால் நாம் சத்தியத்தை அறிந்திருந்தும் துணிகரமாகப் பாவம் செய்வோமானால் நாம் நியாயத்தீர்ப்பின் நாளிலே நரக ஆக்கினையை அடைவோம். எனவே, இன்றே மனந்திரும்பி, சிலுவையண்டையில் கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்தால் கழுவப்படுவோமாக. 
ஜெபம்: தேவனே, நியாயத்தீர்ப்பைக்குறித்து வேதம் தெளிவாகச் சொல்லியும் அதை அசட்டை செய்பவர்கள் அநேகர். ஆனால், நான் இதைக்குறித்து அசட்டையாயிராமல், இயேசுகிறிஸ்துவின் இரத்தம் தரும் பரிசுத்தத்தைப்பெற்று ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்பட கிருபை தாரும்.  ஆமென்
 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page