வெள்ளி, மார்ச் 07 || பாவத்திற்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் பிழைத்திருங்கள்
- Honey Drops for Every Soul
- Mar 7
- 1 min read
வாசிக்க: ரோமர் 6:6-14
நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், .. இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ரோமர் 6:11
நாம் இரட்சிக்கப்பட்ட பின்னர், அதுவரை நாம் அறியாத பல புதிய ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம். தேவன், அவருடைய குமாரன், அவருடைய பரிசுத்த ஆவியைப் பற்றியும் நம்மைப் பற்றியும் இன்னும் அதிகமாக நாம் கற்கத் தொடங்குகிறோம். நம்மைக் குறித்து அறிந்துகொள்ளும்போது சிலவேளைகளில் நாம் சோர்வடைகிறோம். நாம் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டோம் என்று மட்டுமல்ல, நமக்குள்ளே இருக்கின்ற தீய சுபாவம் நம்மைப் பாவம் செய்யத் தூண்டுகிறது என்றும், அதை நம்மால் சரிப்படுத்தவோ அல்லது அதிலிருந்து வெளியேறி முன்னேறவோ முடியாது என்றும் கற்றுக்கொள்கிறோம். கர்த்தருக்குப் பிரியமான விதத்தில் வாழவேண்டும் என்று நாம் ஆசைப்படும்போது, நமக்குள் இருக்கும் நம் பழைய சுபாவம் பாவம் செய்யவே விரும்புவதால் நமக்குள் ஒரு போராட்டம் துவங்குகிறது. ஆனால், இயேசு செலுத்திய பலியானது, நம் பாவத்தை அகற்றிப்போட்டதோடு, நம்மில் இருந்த பழைய பாவ சுபாவத்தையும் அகற்றி நமக்கு விடுதலையும் ஜெயத்தையும் தந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுகிறோம். பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் என்று ரோமர் 6:6 கூறுகிறது. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்ல, நம் பாவத்துக்குக் காரணமான பழைய சுபாவமும் கிறிஸ்துவின் சிலுவையிலே அறையப்பட்டுவிட்டது! இந்த வேதப்பகுதியில் நாம் மூன்று காரியங்களைக் கற்றுக்கொள்ளுகிறோம் - முதலில், நம்முடைய பழைய மனுஷன் கிறிஸ்துவோடுகூட சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது;
இரண்டு, பாவத்துக்கு நாம் மரித்துப் போனோம், அதிலிருந்த நம் உறவு முறித்துப்போடப்பட்டது என்று நாம் எண்ணுகிறோம்;
மூன்று, அந்த பாவம் நம் சரீரத்தை ஆளுகை செய்வதற்கு நாம் அனுமதிப்பதில்லை! முன்பு பாவம் நம் எஜமானாயிருந்தது, அது மரித்துப்போய்விட்டதால் இனி அது நம் எஜமானாயிருப்பதில்லை என்று எண்ணவேண்டும்.
அன்பானவர்களே, கிறிஸ்துவின் மரணத்தால் நாம் தேவனுடன் ஐக்கியமாகும்படி நேர்ந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த மகிழ்ச்சியை உலகம் அறியாது, இரட்சிக்கப்படாதவர்களுக்கு இது கிடைக்காது. ஆனால், நாம் கிறிஸ்து செலுத்திய பலியினாலே முன்பிருந்ததைக் காட்டிலும் நாம் தேவனுக்கு மிக அருகாமையில் கொண்டுவரப்பட்டோம்; ஆகவே, நாம் சந்தோஷமாயிருப்போம்!
ஜெபம்: ஆண்டவரே, என் இருதயமும் மனச்சாட்சியும் விடுதலை பெற்றபடியால் கிறிஸ்துவின் மரணத்தை வேறுகோணங்களில் பார்க்கமுடிகிறது. அவர் மரணமே என்னை உமது ஐக்கியத்தில் கொண்டு வந்தது. இது உலகிற்கு தெரியாதிருந்தும், எனக்கு நீர் வெளிப்படுத்தி, உமதருகில் வர உதவினீர். உமக்கு நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios