top of page

வெள்ளி, நவம்பர் 22 || தெளிதேன் துளிகள்

வாசிக்க:  லூக்கா 9:62; கொலோசெயர் 3:22-24


பின்னடையாமல் அர்ப்பணிப்போடு ஊழியம் செய்!


தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.  - நீதிமொழிகள் 22:29


ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய சகோதரன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால், அவனது மனைவியும் ஐந்து பிள்ளைகளும் அவனை ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள். அவன் மிகுந்த துக்கத்துக்குள்ளானாலும், கிறிஸ்துவை உத்தமமாகப் பின்பற்றி அவருக்கு சேவை செய்தான். சில மாதங்களுக்குப் பின் அவன் பிரசங்கிப்பதற்கு அழைக்கப்பட்டான். அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள, கார்லோஸ் ஓவன்ஸ் என்ற தேவமனிதனின் உதவியை நாடினான். ஆனால் அவன் பேசவிருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் ஆலயத்திற்கே வரவில்லை. அவனது வீட்டிற்குச் சென்றவர்கள் அது காலி செய்யப்பட்டிருந்ததைக் கண்டு திகைத்தார்கள். அடுத்த நாள் அந்த சகோதரன் கார்லோஸின் வீட்டிற்கு வந்தார். அவரது உடலெல்லாம் நையப் புடைக்கப்பட்டு, இரத்தக்கறை படிந்திருந்தது. அவன் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை விரும்பாத அவனது சகோதரர்கள் சனிக்கிழமை இரவு அவனை வலுக்கட்டாயமாக ஒரு காட்டுக்குள் தூக்கிச் சென்று மரத்தில் கட்டிவைத்து அடித்து, இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டிருந்தினர். எப்படியோ அந்தக் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தங்களிடம் வந்த அவனது காயங்களை அந்த தேவமனிதனும் அவரது மனைவியும் கழுவி கட்டியபோது, அவன் வலியின் மத்தியிலும் சந்தோஷமாக, அவர்கள் என்னைக் கொன்றே போட்டாலும் சரி நான் என் அன்பு இயேசுவைக் குறித்துப் பிரசங்கிக்காமல் இருக்கமாட்டேன் என்று உற்சாகமாகக் கூறினான். அவனுக்குத்தான் எத்தனை ஆழ்ந்த விசுவாசம்!


அன்பு நண்பர்களே, நமது அர்ப்பணிப்பு எப்படி இருக்கிறது? ஏதோ கடமைக்காக நாம் வேலை செய்தால் அது பரிதபிக்கக்கூடியதாயிருக்கும். மாறாக, உற்சாகத்துடனும் வைராக்கியத்துடனும் செய்வோமென்றால் அது புகழப்படத்தக்கதாக இருக்கும். செய்யும்படி உங்கள் கைகளுக்கு நேரிடுவது எதுவோ அதை உங்கள் முழு பலத்துடன் செய்யும்படி பிரசங்கி அறிவுறுத்துகிறார். (பிரசங்கி 9:10) முக்கியமாக ஆண்டவரின் வேலையில், நாம் எதிர்ப்புகள் மத்தியிலும், கஷ்டங்களின் மத்தியிலும் பாரத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும். விடாமுயற்சியுடன் தொடர்ந்து நாம் அப்படி செயல்பட்டால் நாமும் ஒருநாள் ராஜாதி ராஜாவுக்கு முன்பாக நின்று அவர் தரும் கிரீடத்தைப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்: பரம தகப்பனே, என் வாழ்வை உமக்கென்று அர்ப்பணித்திருக்கிறேன். கஷ்டநஷ்டம் உண்டானாலும், கலங்கிப்போகாமல், சோர்ந்துபோய்விடாமல், அர்ப்பணிப்பில் உறுதியாய் நின்று, இறுதிவரை வைராக்கியத்துடன் உம் பணி செய்து நீர் தரும் கிரீடம் பெற உமது கிருபையைத் தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page