வாசிக்க: ரோமர் 8: 26-28
பரிசுத்த ஆவியானவர் நமக்காகப் பிதாவிடம் வேண்டுகிறார்
... நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே .. நமக்காக வேண்டுதல்செய்கிறார். (ரோமர் 8:26)
நம்முடைய பலவீன நேரங்களில் பரிசுத்த ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சுக்களுடன் நமக்காக விண்ணப்பம் பண்ணுகிறார். ஜெபத்திலே நாம் பலவீனர்களாயிருக்கிறோம். அநேக வேளைகளில், குறிப்பாக எதற்காக நாம் ஜெபிக்கவேண்டும் என்பது நமக்குத் தெரியாது. நாம் எல்லாமறிந்தவர்கள் இல்லை. நமக்கு அனைத்தும் தெரியாது, வருங்காலத்தை நம்மால் பார்க்க முடியாது. ஆகவே, நாம் கேட்கும் அநேக காரியங்கள் நன்மை பயக்குமா தீமை பயக்குமா என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், கர்த்தர் நம் எதிர்காலத்தை அறிந்திருக்கிறார். ஆல்பா ஒமேகாவும், ஆதியும் அந்தமுமானவர் அவர். அவர் முடிவை முதலிலேயே அறிந்திருக்கிறார்; சகல காரியமும் எப்படி முடியும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். பலனுள்ள ஜெபத்தின் அடிப்படைக் கொள்கை, அது தேவனுடைய சித்தத்துடன் இசைந்திருக்கவேண்டும் என்பதே. எனவே, நமக்குள் வசிக்கும் தேவ ஆவியானவர், நம் தேவைகளை நன்றாய் அறிந்திருப்பதால், நமக்காக அவர் பெருமூச்சுக்களுடன் பரிந்துபேசுகிறார்.
நம் தேவைகளை விளக்கிச்சொல்ல அவர் மட்டுமே அறிந்திருப்பதால், நமக்குள்ளே இருந்து மன்றாடுகிறார், நம் ஆவல்களையும் தூண்டிவிடுகிறார். சிலவேளைகளில் இருள் நம் மனதை மூடுகிறது, நம்பிக்கையின்மை நம் ஆவியை சலிப்புறச் செய்கிறது, குற்றவுணர்வு நம் மனச்சாட்சியை அலைக்கழிக்கிறது, சாத்தான் தன் அக்கினியாஸ்திரங்களை நம்மீது எறிகிறான். எனவே நாம் ஊக்கத்துடன் ஜெபிப்பது தடுக்கப்படுகிறது. இந்த குழப்பம் மற்றும் கவனச் சிதறலான நேரத்தில், அனைத்தும் சேதத்துக்கு நேராகப் போவதுபோல் தோன்றுகையில், பரிசுத்த ஆவியானவர் அன்புடனும் கனிவுடனும் நம்மிடம் வந்து நம்மை மீட்டெடுத்து, எப்படி ஜெபிக்கவேண்டும், எதற்காக ஜெபிக்கவேண்டும் என்று நமக்குக் கற்றுத்தருகிறார்!
அன்பானவர்களே, சில சமயம், என்ன ஜெபிக்கவேண்டும் என்று தெரியாமலே கர்த்தரிடத்தில் நீங்கள் சென்றிருக்கிறீர்களா? அப்பா! என்று கூப்பிடுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாத நிலையில் அவரிடம் சென்றிருக்கிறீர்களா? அந்த நேரங்களில் ஆவியானவர் நம் பலவீனங்களிலே நமக்கு உதவி செய்கிறார். பிதாவானவர் புரிந்துகொள்ளுகின்ற வகையில் நம் வார்த்தைகளை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறார் ஆவியானவர்! நாம் ஜெபம்பண்ண முயற்சிசெய்வதைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆவியானவர் மாற்றி விண்ணப்பம் செய்கிறார்.
ஜெபம்: ஆண்டவரே, மிகச் சிக்கலான சூழ்நிலைகள் வரும்போது திகைத்து, எப்படி ஜெபிப்பது என்று அறியாதிருக்கிறேன். சிறந்தது எது, உம் சித்தம் எது என்று நான் அறியாதிருக்கிறேன். எனக்கு உதவிட, எனக்காக பெருமூச்சுடன் ஜெபிக்க நீர் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவிக்காக நான் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments