வாசிக்க: உபாகமம் 6: 13-19
நம் ஜெபங்களுக்கு ஏன் பதில் வரவில்லை?
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
- நீதிமொழிகள் 28:9
சில நேரங்களில் நாம் செய்யும் ஜெபங்கள் தேவனுக்குப் பிரியமாயிருப்பதில்லை. அதன் விளைவாக அவரிடமிருந்து பதில் வருவதில்லை. தேவனுக்கு நாம் கீழ்ப்படியாதிருந்தால், அவர் நம் ஜெபங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. கீழ்ப்படியாமையின் வாழ்வை நாம் வாழ்ந்தால் தேவன் நமக்காக வைத்திருக்கும் அனைத்தையும் நம்மால் பெறமுடியாது. எனவே, அவரில் நாம் வளருவதற்கு, நாம் என்ன செய்ய அவர் விரும்புகிறாரென்பதை அவரிடம் அடிக்கடி கேட்கவேண்டும். மத்தேயு 19:17ல் இயேசு, நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்று கூறினார். நாம் என்ன செய்யவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறாரோ அதை நாம் செய்கிறோம் என்று அறிவதைக் காட்டிலும் வேறெதுவும் நமக்குச் சமாதானம், தைரியத்தைத் தராது. அவர் வழிகளுக்குக் கீழ்ப்படிந்தால் நாம் இரக்கத்தை (சங்கீதம் 28:6), சமாதானத்தை (சங்கீதம் 37:37) ஆசீர்வாதத்தைப் (நீதிமொழிகள் 29:18) பெறுவோம்; ஆனால், கீழ்ப்படியாமை கடுமையான விளைவை (நீதிமொழிகள் 15:10), பதில் பெறாத ஜெபங்கள் (நீதிமொழிகள் 28:9), தேவராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாத நிலை (1 கொரிந்தியர் 6:9) போன்றவற்றைக் கொண்டு வரும்.
அன்பானவர்களே, கீழப்படிந்து நடப்பது என்பது தேவ கட்டளைகளின்படி செய்வது மட்டுமல்ல, அவர் நமக்குத் தரும் திட்டவட்டமான அறிவுரைகளுக்கு செவிசாய்க்கவும் வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வேலையில் நாம் இருக்கும்போது, அதை விட்டு வேறு ஒரு வேலைக்குப் போகும்படி, இருக்கும் இடத்தைவிட்டு வேறொரு இடத்துக்குப் போகும்படி தேவன சொன்னால், அல்லது நாம் எப்போதும் செயலாற்றுகின்ற முறையை மாற்றச் சொன்னால், அவர் சொற்படி செய்யாமல் நாம் இருந்தால், அது கீழ்ப்படியாமை! எதைச் செய்யும்படி அவர் சொன்னாலும் அதை நம் நன்மைக்காகவே சொல்லுவார். தேவனுடைய வழிகள் நம் வழிகளைவிட மேலானவைகளாய் இருப்பதால், அவரது வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியும்போது, நம் ஜெபத்தை அவர் கேட்கும் வழி திறக்கும்.
ஜெபம்: ஆண்டவரே, என் ஜெபம் உமக்கு அவருப்பாய்ப் போகாதபடி என்னைச் சரியான வழியில் நடத்தும். ஒவ்வொரு முறை உம் வார்த்தையை வாசிக்கையில், நான் அதிகமாய் புரிந்துகொள்ளும்படி எனக்குக் கற்பியும். உம் சத்தத்தைக் கேட்டு கீழ்ப்படிந்து நடக்க உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
コメント