வாசிக்க: மாற்கு 4:35-41
இயேசுகிறிஸ்துவே இரட்சகர்!
படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று... - மத்தேயு 8:24
திரு. கிறிஸ்டி என்பவர், இந்த கலிலேயாக் கடலில் காற்றானது ஒரு திசையிலிருந்தல்ல, பல திசைகளிலிருந்தும் வீசும். படகுகள் பயங்கரமாகத் தூக்கி வீசப்படும் என்கிறார். ஒருமுறை கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், இந்தக் கடலில் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடி புயல் வருவது எப்படி சாத்தியம் என்று வியந்தபடி நின்றுகொண்டிருந்தபோது, திடீரென பலமான காற்று வீசியது; நுரைதள்ளும் அலைகள் எழும்பின; கடற்கரையைவிட்டு இருநூறு கெஜம்(Yards) தூரத்தில் அவர்கள் நின்றிருந்தபோதும் அலைகளின் சாரல் அவர்களை முற்றிலுமாக நனைத்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு புயல்தான் இன்றைய வேதப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவேதான் மரணபயத்தில் சீஷர்கள் அலறினர்.
அன்பானவர்களே, இந்த சீறும் கடலின் அனுபவம் நம்மில் பலருக்கு வாழ்வில் அடிக்கடி ஏற்படுவது உண்டு. இப்படிப்பட்ட புயல்களைக் கண்டு நாம் அதிர்ந்துபோகிறோம். இவற்றிலிருந்து நாம் தப்புவது இயலாத காரியம் என்றும் நினைக்கின்றோம். வியாதிகளோ, பெலவீனங்களோ, பணக்கஷ்டமோ, தனிமையுணர்வோ, மற்றவர்களால் கைவிடப்பட்ட நிலையோ, மற்றவர்கள் செய்யும் சூழ்ச்சி மற்றும் தந்திரங்களோ நமக்கெதிராக பயங்கர சீற்றத்துடன் வரலாம். ஆனால் அப்படிப்பட்ட சமயங்களில் நாம் தைரியத்தை இழந்துவிடாமல் நம் ஆண்டவர் நம்மோடுதான் இருக்கிறார் என்றும், அவரால் அடக்கமுடியாத புயல் எதுவும் நம் வாழ்வில் வருவதில்லை என்றும், அவர் தம் வார்த்தையினாலே சீறும் புயல்களைக் கட்டுப்படுத்த வல்லவர் என்றும் உறுதியாக நம்பவேண்டும். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கடும்புயலை அடக்கி வாழ்வெனும் கடலை அமைதிப்படுத்துவதோடு அமளியிலிருக்கும் நம் மனதையும் அமைதிப்படுத்துவார்.
ஜெபம்: பரம தகப்பனே, நீர் என்னுடன் இருக்கையில் எதுவும் என்னைச் சேதப்படுத்தாது. உமது அன்பினின்றும் உமது பிரசன்னத்தினின்றும் என்னை எதுவும் பிரித்துவிடவும் செய்யாது. வாழ்வின் புயல்களை நான் சந்திக்கும்போது இந்த நினைவு என் ஆத்துமாவை அமைதிப்படுத்த கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments