வெள்ளி, ஜனவரி 31 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 31
- 1 min read
பணக்காரர்களுக்கு பரலோக அனுமதி இல்லையா?
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. - 1 தீமோத்தேயு 6:10
ஒரு பணக்கார இளைஞன் இயேசுவிடம் வந்து நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்யவேண்டும் என்று ஆவலோடு கேட்டான். நீ போய் உனக்கு இருப்பதனைத்தையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிடு. பிறகு என்னைப் பின்பற்றி வா என்றார் இயேசு. அந்த இளைஞன் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளமுடியாமல், வருத்தத்துடன் திரும்பிப்போய்விட்டான். செல்வத்தை விரும்பி நித்திய ஜீவனை விட்டுவிட்டானே என்று நினைத்து, ஆண்டவராகிய இயேசுவின் இதயமும் கனத்துப்போயிருக்கும். ஆகவேதான், அவர் தம் சீஷர்களை நோக்கி, ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்று கூறினார். செல்வந்தர்கள் வேறு வேலையேதும் செய்து பிழைப்பு நடத்த அவசியமில்லாதபடியால் ஆவிக்குரிய காரியங்களுக்கு அதிக நேரம் கொடுக்க அவர்களால் இயலும் என்றும், ராஜ்யத்தின் பணிக்கு அதிகப் பொருளை அவர்களால் கொடுக்கமுடியும் என்றும் சீஷர்கள் எண்ணினார்கள். எனவே, இயேசு வித்தியாசமான கருத்தை கூறியபோது அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அன்பு நண்பர்களே, பணம் தன்னிலேதானே தீமையானதல்ல. இன்று நமக்கு இந்த உலகில் வாழ்வதற்கு பணம் தேவையாயிருக்கிறது. ஆனால், பணத்தை நாம் ஆளவேண்டுமே ஒழிய பணம் நம்மை ஆள விட்டுவிடக்கூடாது. எனவே, ஆண்டவர் இயேசு கூறியதன் உள்ளர்த்தம், தேவராஜ்யத்தில் பிரவேசிப்பது நம் இதயம் எதன்மேல் இருக்கிறது என்பதைக்குறித்தே நிர்ணயிக்கப்படுகிறது என்பதே! எனவே, நம் தேவன் நமது தேவைகள் அனைத்தையும் சந்திப்பவர் என்ற நினைவுடன் வாழ்ந்து, பணத்தைப் பிரதானப்படுத்தாமல் நித்தியஜீவனையே பிரதானமாகக் கொள்ளவேண்டும்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எனக்குள்ளாக புதைந்துகிடக்கும் பண ஆசையை கிருபையாக எடுத்துப்போடும். ஒருபோதும் உமக்கு மேலாக செல்வத்தை வைக்காமல் உமது ராஜ்யத்தையே நாட உதவி செய்யும். நீர் என் அனுதின தேவைகளைச் சந்திப்பீர் என விசுவாசிக்கக் கிருபை தாரும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments