வெள்ளி, ஜனவரி 24 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 24
- 1 min read
தன்னைத்தான் வெறுப்பதே கிறிஸ்தவனுக்கு அழகு!
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. - எசேக்கியேல் 2:7
இன்று மக்கள் தங்களுக்கு சௌகரியமான, சுலபமான, பக்திமார்க்கத்தையே தெரிந்துகொள்கிறார்கள். கிறிஸ்தவர்களிலும் அநேகர், தங்களை எந்தவிதத்திலும் பாதிக்காத ஆவிக்குரிய வாழ்வை விரும்புகிறவர்களாயிருக்கிறார்கள். சர்க்கஸ் நிகழ்ச்சிகளில், ஒரு பெண்ணை நிறுத்திவைத்து அவள்மேல் படாதவண்ணம் கூர்மையான கத்திகளை வீசும் காட்சியைப் பார்க்கமுடியும்! எதிரில் நிற்பவளை எந்தவிதத்திலும் காயப்படுத்திவிடாமல் கைகளுக்கிடையில், அவளது கால்களுக்கிடையில், காதுகளின் பக்கத்தில், கழுத்தின் இருபுறங்களிலும் இப்படி லாவகத்துடன் கத்திகளை வீசி, பின்னால் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் பாயும்படி செய்யும் கலை நம்மை ஆச்சரியப்படவைக்கும். அப்படிப்பட்ட, தங்களை எந்தவிதத்திலும் பாதிக்காத, பிரசங்கங்களையே இன்றைய நவீன கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். தங்களை மகிழ்விக்கிற வார்த்தைகளைக் கேட்கவே எல்லாருடைய இருதயங்களும் விரும்பினாலும், நமது குறைகளைச் சுட்டிக்காட்டும் தேவவார்த்தைகளைக் கேட்டு நம்மைத் திருத்திக்கொள்வதே அதிக நன்மை தரும்.
பிரியமானவர்களே, இன்றைய வேதப்பகுதியில் தங்கள் தரிசனக்காரர்களிடம் தரிசனங்களைக் காணவேண்டாம் என்றும் ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி எங்களுக்கு இதமான சொற்களை உரையுங்கள் என்றும் சொன்ன இஸ்ரவேலரைக் குறித்து வாசிக்கிறோம். இவர்களைப்போன்றே இன்றும் நீதியைக்குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்தாமல், வளமை வாழ்வை மாத்திரம் பிரசங்கிக்கிறவர்கள் பின்செல்லும் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது. ஆனால் நீங்களோ, ஆண்டவர் இயேசு கூறியதை மறந்துவிடாதீர்கள். ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும் என்று அவர் கூறினாரே. (மத்தேயு 16:24) சிலுவை என்பது சுயத்தை வெறுத்துவிடுதலே! அதுவே, வாடாத கிரீடமாகிய நித்திய வாழ்வைப் பெற சரியான வழி.
ஜெபம்: தேவனே, ஈஸி சேர் கிறிஸ்தவத்தை விரும்புகிறவனாய் வளமை மற்றும் சுக வாழ்வை மாத்திரம் பிரசங்கிக்கிறவர்களை நோக்கி நான் ஓடாமல், ஆரோக்கியமான உபதேசத்தை நாடி, சிலுவையைச் சுமக்க தயாராயிருந்து நித்திய நல்வாழ்வையும் வாடாத மகுடத்தையும் பெற கிருபை தாரும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments