வாசிக்க: சங்கீதம் 119: 9-16
வேத வார்த்தையை விலக்கலாமா?
... உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. - சங்கீதம் 119:50
மிகவும் துரிதமாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் இன்று பல கிறிஸ்தவர்கள் வேதத்தைப் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் எடுத்துக்கொள்ளும் நேரம் மிக மிகக் குறைவே என்பது வருத்தம் தருகிறது. அப்படியே படித்தாலும் சங்கீதத்தில் சில வசனங்கள் அல்லது நீதிமொழிகளில் சில வசனங்களைப் படித்துவிட்டால் போதும் என நினைக்கிறவர்களும் ஏராளம். இதன் விளைவாக அவர்களது ஆவிக்குரிய வாழ்வில் தேக்கம் உண்டாகி, சாத்தானுக்கு இடம்கொடுத்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. பிரதரன் மற்றும் ஜெகோவா ஷம்மா சபைகளின் ஸ்தாபகர் பக்த்சிங் தன் வேதத்தைத் திறப்பதற்கு முன், ஆண்டவரே, உமது வார்த்தைகளைக் கொண்டிருக்கும் இந்த புத்தகத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இதைப் படிக்கையில் என்னோடு பேசும், எனக்குப் போதியும் என்று ஜெபிப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தாராம். வேததியானத்தினால் தான் பெற்றுக்கொண்ட நன்மைகளைக்குறித்து பின்னாட்களில் அவர் கூறியதாவது: அதனால் வேதத்தின் வெளிச்சத்தை நான் அதிக அதிகமாய் பெற்றுக்கொண்டேன். ஒருபக்கம் என் உள்ளான குறைகளை அது வெளிச்சம் போட்டுக் காட்டியது; மறுபக்கமோ, என்னை மன்னித்து என்னைச் சுத்திகரிக்கும் ஆண்டவரின் கிருபையையும் சுட்டிக்காட்டியது. எனவே, ஒவ்வொரு நாள் படுக்கைக்குச் செல்லுமுன்பதாக, ஆண்டவரே, இன்று நான் உம்மைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழ்ந்தேனா? என் நினைவு, சொல், செயல் அகியவற்றில் ஏதாவது தவறுகள் செய்திருப்பின் எனக்குக் காட்டும் என்று ஜெபிப்பேன். உடனே அவர் எனக்குக் காண்பிப்பார். அவற்றை அப்போதே அறிக்கை செய்து விட்டுவிடுவேன். எனக்குள் ஒரு தெய்வீக சமாதானம் வந்துவிடும். குழந்தையைப்போலத் தூங்கிவிடுவேன்.
அன்பானவர்களே, வேதவாசிப்பை அசட்டை செய்யக்கூடாது. நேரமில்லை என்று சொல்லாமல் அதிகாலையில் சற்று முன்பதாகவே எழுந்து, வேதத்தை வாசிக்கவேண்டும். வேதவசனம் நம்மைத் தேறினவர்களாக நிறுத்தும்படி போதிக்கிறது, சிட்சிக்கிறது, நீதியைப் படிப்பிக்கிறது. (2 தீமோத்தேயு 3:16) அதுவே சாத்தானிடமிருந்து நம்மைக் காக்கும் ஆவிக்குரிய பட்டயம்.
ஜெபம்: கர்த்தாவே, நான் அதிகமான வேலைப்பளுவினால் அவதிப்படுவதால் வேததியானத்தை அசட்டை செய்துவிட்டேன். என்னை மன்னியும். வேதத்தை வாசிப்பதால் வரும் நன்மைகளை இன்று எனக்கு தெளிவாக்கினீர். அனுதினமும் நேரமெடுத்து உம் வார்த்தையை உட்கொள்ள எனக்கு கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments