வெள்ளி, ஏப்ரல் 04 || சிறு பிள்ளைகளுக்கு உதவுகின்ற இருதயம்
- Honey Drops for Every Soul
- 6 days ago
- 1 min read
வாசிக்க: மத்தேயு 19: 13-15
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4
பிள்ளைகள் கர்த்தரின் ஈவு. அன்போடும், ஞானத்தோடும் அவர்களை பராமரிக்க அவர் நம்மை அழைக்கிறார். பிள்ளைகளைப் பற்றி, அவர்கள் முக்கியத்துவத்தைப் பற்றி, அவர்களை நடத்துவது எப்படி என்பதைப்பற்றி வேதம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. பிள்ளைகளுக்கு உதவுவதின் முக்கியத்துவத்தைப்பற்றி இன்றும், நாளையும் வேத வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் தியானிப்போம். சங்கீதம் மற்றும் மற்ற வேதப்பகுதிகளிலிருந்து பிள்ளைகளைப் பராமரிக்கவும், அவர்களைப் பேணிக் காக்கவும் நம் இருதயங்களை ஊக்கப்படுத்தும் வசனங்களைப் பார்ப்போம். தேவனுடைய வார்த்தையானது பிள்ளைகளின் அருமையை நமக்கு நினைப்பூட்டுகிறது. பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் என்றும், பலன் என்றும் சங்கீதம் 127:4 கூறுகிறது. இது பிள்ளைகள் தேவனுக்கு எவ்வளவு முக்கியம் என்றும், அவர்களை எவ்வளவாக அவர் கனம்பண்ணுகிறார் என்றும் காண்பிக்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம், என்றும் பிள்ளைகளின் நலன் நாடுபவர்களாகவும், அவர்களுக்கு அன்பும் வழிகாட்டுதலும் வழங்குபவர்களாகவும், அவர்களை அக்கறையுடனும் மதிப்புடனும் நடத்துபவர்களாகவும் இருக்கவேண்டும். பிள்ளைகள்மீது நமக்குள்ள பொறுப்பையும் வேதம் நமக்குக் கற்றுத்தருகிறது.
முதலாவது, பிள்ளைகளை வழிநடத்துதல்: பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து, அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்று நீதிமொழிகள் 22:6 கூறுகிறது. இந்த வசனம் பிள்ளைகளை விசுவாசத்தில் நடத்துவதன் முக்கியத்துவத்தையும், அவர்களை ஞானத்தில் வளர்ப்பதன் அவசியத்தையும் நமக்குக் கற்றுத் தருகிறது. தேவனின் அன்பைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு நாம் உதவிடும்போது, அதன்மூலம் அவர்களது விசுவாசப் பயணத்தைத் துவக்கவும் நாம் உதவுகிறோம்.
இரண்டாவது, மனதுருக்கம் காட்டுதல்: இயேசு பிள்ளைகளிடம் அதிக மனதுருக்கத்தைக் காண்பித்தார். மத்தேயு 19:14ல் அவர், சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள் பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்றார்.
அன்பானவர்களே, சிறுபிள்ளைகளை கரம் நீட்டி தம்மிடம் வரவழைத்த இயேசு, அதன்மூலம் பிள்ளைகளை ஏற்றுக்கொண்டு, அவர்கள்மீது அன்புகூரும் அவசியத்தை நமக்குக் கற்றுத்தருகிறார். நம் இருதயமும் பிள்ளைகளுக்குத் திறந்ததாகவும், அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு நம் வாழ்க்கையில் இடம் அளிப்பதாகவும் இருப்பதாக.
ஜெபம்: பரம தகப்பனே, விலைமதிப்பற்ற ஈவாகிய பிள்ளைகளுக்காக உமக்கு நன்றி. அவர்கள் உம்மால் வரும் சுதந்தரம் என்பதை நாங்கள் உணர்கிறோம். அவர்களைப் பராமரிக்க நீர் கொடுத்த வாய்ப்புக்காக உமக்கு நன்றி. அவர்களை உம் சத்தியத்திலே வழிநடத்தவும், அன்பையும், மனதுருக்கத்தையும் காண்பிக்கவும் எங்களுக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments