வாசிக்க: எண்ணாகமம் 27: 1-11
உங்களது குறைகளை யாரிடம் சொல்கிறீர்கள்?
அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். - சங்கீதம் 142:2
நம்மில் அநேகர், அற்பக் காரியங்களைக் குறித்து குறைகூறுகிறோம். குறைகூறுவதால் நாம், கசப்பையும் வெறுப்பையுமே உண்டாக்குகிறோம். ஆயினும், சரியான நபர்களிடத்தில் புகார்கள் சொல்லப்படும்போது பிரச்சனைகளை தீர்த்துவிடலாம். எண்ணாகமம் 27ம் அதிகாரத்தில் செலோப்பியத்தின் குமாரத்திகள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திற்குள் நுழையுமுன்பே அவர்களது தகப்பனார் வனாந்திரத்தில் மரித்துப்போனார். செலோப்பியத்திற்கு வேறு குமாரர்கள் இல்லை.
ஆனாலும் குமாரருக்கான சுதந்திரத்தை குமாரத்திகளுக்குக் கொடுப்பதைப்பற்றி நியாயப்பிரமாணம் ஒன்றும் சொல்லவில்லை. எனவே, தந்தையையும் இழந்து, சகோதரரும் இல்லாத நிலையில், இன்னும் திருமணம் ஆகாதிருந்த இந்த ஐந்து பெண்களும் மோசேயிடம் வந்து தங்கள் குறையை எடுத்துரைத்தனர். தங்களுக்கென்று சொந்தமாக ஒரு சின்ன இடமும் கொடுக்கப்படாதது அவர்களைக் குறைகூற வைத்தது. ஆனாலும், அவர்கள் செய்த நல்ல காரியம் மற்றவர்களிடம் வதந்திகளைப் பரப்பாமல், தலைவனாகிய மோசே, ஆசாரியனாகிய எலியேசர் மற்றும் இஸ்ரவேலின் பிரபுக்களின் முன்னிலையில் நேரடியாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இதை மோசே கர்த்தரிடம் எடுத்துச்சென்றபோது அவர், ஒருவன் குமாரனில்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும் என்று கூறினார். (எண்ணாகமம் 27:8) இந்த செலோப்பியத்தின் குமாரத்திகள் மோசேயிடம் வராமல் மற்றவர்களோடே மாத்திரம் குறைகூறிக்கொண்டே இருந்திருப்பார்களானால் தங்கள் சுதந்தரத்தை அடைந்திருக்கமுடியுமா? நிச்சயம் முடியாது அல்லவா?
அன்பு நண்பர்களே, ஒருவேளை யார்மீதாவது புகார்கள் இருந்தால், சரியான நபர்களிடம் கூறுங்கள். மேலும், மனிதர்களிடத்தில் நியாயம் எடுபடாதே போகும்போது குறைதீர்க்கும் வல்லவராகிய நம் கர்த்தரிடம், நாம் புகாரைச் சொன்னால், அவர் நம்மைத் தள்ளிவிடாமல் நிச்சயம் நமக்கு நியாயம் செய்வார். அவர் நீதியுள்ள நியாயாதிபதி!
ஜெபம்: கர்த்தாவே, சின்னச் சின்ன காரியங்களுக்காகவும் நான் சந்திக்கும் அனைவரிடத்திலும் குறைகூறிக்கொண்டு திரிந்திருக்கிறேன். என் சுபாவத்தை மாற்றும் ஆண்டவரே! என் குறைகளை உம்மிடத்தில் சொல்லி, சரியான நபரைச் சந்தித்து நியாயத்தைப் பெற்றுக்கொள்ள கிருபை தாரும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி.
அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments