வெள்ளி, அக்டோபர் 18 வாசிக்க: ஏசாயா 6:1-13
- Honey Drops for Every Soul
- Oct 18, 2024
- 2 min read
Updated: Oct 18, 2024
கர்த்தரை நம்பி அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!
இந்த மனுஷன்... எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று ... கேள்விப்பட்டிருக்கிறேன்.
- அப்போஸ்தலர் 9:13
கர்த்தர் ஒருநாள் அனனியாவுக்கு தரிசனத்தில் தோன்றி, நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய் யூதாவின் வீட்டிலே தர்சு பட்டணத்தானாகிய சவுல் எனும் பேருள்ள ஒருவனைத் தேடு என்றார். அனனியாவுக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சவுல் விசுவாசிகளைத் துன்புறுத்தி கொலை செய்கிறான் என்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அவன் பிரதான ஆசாரியனிடமிருந்து கடிதம் வாங்கிக்கொண்டு தமஸ்குவுக்கு அதே நோக்கத்துடன் வந்திருக்கிறான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. எனவே, எப்படி ஆண்டவர் அவனிடத்திற்கு தன்னை

அனுப்பலாம் என்று அவனுக்குக் கோபம் வந்தது. ஆண்டவரிடத்தில் தனது எண்ணத்தை அவன் மெதுவாக வெளிப்படுத்தினான்.
அன்பானவர்களே, நாமும் பல சமயங்களில் அனனியாவைப்போல, நமக்கு நன்றாகத் தெரிந்தவைகளை ஆண்டவரிடம் கூறுகிறோம். அவர் ஆதியிலிருந்து அந்தத்தையும், அந்தத்திலிருந்து ஆதியையும் அறிந்தவராயிருக்கிறார் என்பதை மறந்துபோகிறோம். அவர் எல்லாவற்றையும் அறிந்தவர் மட்டுமல்ல, எல்லாவற்றின்மேலும் அதிகாரம் உடையவர் என்பதை உணர்ந்து அவரிடம் பேசுவதற்குமுன் என்ன பேசுகிறோம் என்று நிதானிப்பது நல்லது. அனனியாவுக்குள் இன்னும் சந்தேகமும் பயமும் இருந்தபோதும் அவன் உடனே அவருக்குக் கீழ்ப்படிந்தான். இந்தச் செயல் யோனா செய்ததற்கு நேர்மாறான ஒன்றாக இருக்கிறது. யோனாவை அவர் நினிவேக்குப் போகச் சொன்னபோது அதற்குக் கீழ்ப்படியாமல் அவன் தர்ஷீசுக்கு ஓடிப்போனான். மட்டுமல்ல, பிற்பாடு நினிவே மக்கள் மனந்திரும்பியதால் கர்த்தர் தான் செய்ய நினைத்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு திரும்பியபோது, அவன் மிகவும் கோபப்பட்டான். ஆனால் அனனியாவோ, சவுலைப் பார்த்தபோது அவனிடம் சகோதரனாகிய பவுலே என்று அழைத்து கர்த்தர் சொன்ன காரியங்களை அவனுக்கு விளக்கினான். எனவே, நாமும் நமது எண்ணங்களையே கர்த்தர் தமது சித்தமாகச் செயல்படுத்தவேண்டும் என்று தவறாக எண்ணாமல், அவருக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிந்து அவர் சொல்வதைத் தட்டாமல், இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும் என்று சொல்லி செயல்படுவோம்.
ஜெபம்: ஆண்டவரே, என்னை அழைக்கும்போது கீழ்ப்படிந்து உடேன செயல்பட எனக்குக் கிருபை தாரும். பலவேளைகளில் நான் ஏதாவது காரணங்களைச் சொல்வதோடு, உமக்கே அறிவுரை சொல்லவும் முயல்கிறேன். என்னை மன்னியும். உமக்குக் கீழ்ப்படிய இன்று என்னை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentários