இயேசு ஒருவரே நம் அனைத்து சந்தேகங்களை தீர்க்கமுடியும்
யோவான் ... தன் சீஷ(ரை) .. அழைத்து: வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று (இயேசுவினிடத்தில்) கேட்கும்படி அனுப்பினான்.
- மத்தேயு 11:2,3
தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளை வைத்துக்கொள்வது நியாயமல்ல என்று ஏரோதுக்கு யோவான் ஸ்நானகன் சொன்னபடியால் அவன் ஏரோதுவினால் பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தான். சிறையிலிருந்த யோவான் ஸ்நானகனுக்கு இயேசுதான் வரப்போகிற மேசியாவா என்று சந்தேகம் வந்தது. இயேசுவே மேசியா என்று நம்புவதற்கு ஏதுவாக அவனுக்கு தெளிவான சந்தர்ப்பங்களும் அனுபவங்களும் இருந்தன என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக யோவான் 1:32ல், யோவான் சாட்சியாக சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். மட்டுமல்ல, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று வானத்திலிருந்து உரைக்கும் ஒரு சத்தத்தையும் கேட்டேன். (மத்தேயு 3:17) யோவான் ஸ்நானகன் இயேசுதான் தேவகுமாரன் என்பதைத் தெளிவாகக் கண்டும், கேட்டும் அறிந்து சாட்சி கொடுத்தவன். தேவனிடமிருந்து அவன் பெற்றுக்கொண்ட இப்படிப்பட்ட விசேஷித்த வெளிப்பாடுகளைப் போல வேறு எந்த விசுவாசியும் பெற்றிருக்க முடியாது. உண்மையில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவனின் மகிமையான வெளிப்பாட்டைக் காண்பதற்கு அவன் பெரிய சிலாக்கியம் பெற்றவன். ஒருவனுக்கு இவற்றைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் என நாம் எண்ணலாம். எனவே, யோவான் ஏன் இந்த கேள்வியைக் கேட்டான்? ஏனென்றால், மேசியா தீயவற்றை மேற்கொண்டு, பாவத்தை நியாயந்தீர்த்து, தமது ராஜ்யத்தை நிலைப்படுத்துவார் என்று அவன் எதிர்பார்த்திருந்ததால் அவன் குழப்பமடைந்து அதற்கான விளக்கத்தை நாடினான்.
அன்பர்களே, அநேக கேள்விகளும் சந்தேகங்களும் நமக்கும் இருக்கலாம். பரிசுத்தவான்களாகிய ஆபிரகாம், மோசே, கிதியோன் மற்றும் அப்போஸ்தலர்களுக்கும் சந்தேகங்கொள்ளும் நேரங்கள் இருந்தன. கேள்விகள் கேட்பதும், சந்தேகிப்பதும் மனிதனின் இயல்பான குணங்கள்தான். ஆனால் நமது சொந்த தர்க்கத்தினாலோ அல்லது நமக்காகவே நியாயப்படுத்துவதன் மூலமோ, அல்லது பிறரது அறிவுரைகளினாலோ நம் சந்தேகங்களை தீர்க்க முயற்சி செய்யாமல், யோவான் ஸ்நானகன் செய்ததைப்போல, அவற்றை இயேசுவிடம் எடுத்துச் செல்வோம். ஏனென்றால் நம் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில் இயேசுவிடம் மட்டுமே இருக்கிறது.
ஜெபம்: ஆண்டவரே, அந்நாட்களில் யூதர்களைப்போலவே, யோவானும் இயேசு இவ்வுலகில் தமது ராஜ்யத்தை நிலைப்படுத்துவார் என்று எண்ணியிருந்தான். தன் சந்தேகத்தைத் தீர்க்கும்படிக்கு நேரடியாக தன் சீஷர்களை இயேசுவிடம் அனுப்பினான். யோவானைப்போல நானும் என் சொந்த அபிப்பிராயங்களை விட்டு விட்டு என் சந்தேகத்தை தீர்ப்பதற்கு உம்மையே நாடுவேனாக. ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios