வியாழன், மார்ச் 27 || கர்த்தரைக் குற்றப்படுத்த நாம் யார்?
- Honey Drops for Every Soul
- Mar 27
- 1 min read
வாசிக்க: யோனா 4: 1-11
உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். - சங்கீதம் 75:5
வேதத்தில் தேவனையே குற்றப்படுத்தின சில மனுஷரை நாம் காணலாம்.
முதலாவதாக, கர்த்தர் உண்டாக்கின முதல் மனிதன் ஆதாம், விலக்கப்பட்ட கனியைப் புசித்ததற்கு கர்த்தர் தனக்குக் கொடுத்த துணையாகிய ஏவாளே காரணம் என்று கர்த்தரைக் குற்றப்படுத்தினான். தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள அவனுக்கு மனதில்லை.
இரண்டாவதாக, யோனா, தான் நினிவேக்கு எதிராகக் கூறிய தீர்க்கதரிசனம் நிறைவேறாததால் விசனப்பட்டு கர்த்தர்மேல் கடுங்கோபங்கொண்டான் என்று யோனா 4:1 கூறுகிறது. நினிவேயின் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி மனம் திரும்பியதினிமித்தம் கர்த்தர் தாம் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல் விட்டது யோனாவைச் சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக அதிக துக்கத்திற்குள்ளாக்கிற்று. எனவே அவன், ஆ! கர்த்தாவே, நீர் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். நான் தேசத்திலிருக்கும்போதே இதைச் சொன்னேன். இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன் என்று கூறினான். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனதற்கு அவர்தான் முதல் காரணம் என்று அவரையே குற்றப்படுத்த யோனா துணிந்தது எத்தனை துணிகரமானது.
மூன்றாவதாக, தன் எஜமானிடமிருந்து ஒரு தாலந்தைப் பெற்ற மனிதனைக்குறித்து நாம் வாசிக்கிறோம். அதைக்கொண்டு மேலும் சம்பாதிப்பதைவிட்டு, அவன் அதைத் தரையில் புதைத்துப்போட்டான். எஜமான் கேட்டபோது, தன் சோம்பேறித்தனத்தை அவன் ஒப்புக்கொள்ளவில்லை. நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். எனவே நான் பயந்து அந்த தாலந்தைப் புதைத்துவைத்தேன் என்று தன் எஜமானையே குற்றப்படுத்தினான்.
அன்பானவர்களே, நமது தோல்விகளுக்கு, நாம் எக்காலத்திலும் நமது தேவனைக் குற்றப்படுத்தவே கூடாது. அப்படிச் செய்வது நமது பெருமையை வெளிப்படுத்துகிறது.
ஜெபம்: தேவனே, உம்மையும் உமது கிரியைகளையும் குற்றப்படுத்துவதை விட்டுவிட எனக்கு கிருபை தாரும். நீர் எப்போதும் எல்லாவற்றையும் சரியானபடி செய்வீர் என நம்பி, எனது பெருமையைவிட்டு உமது பாதபடியில் விழுந்து, நன்றி சொல்லி, உம் சித்தம் செய்ய எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments