top of page

வியாழன், மார்ச் 20 || சோதிக்கப்படும்போது மனம் தளராதே!


மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை...

- 1 கொரிந்தியர் 10:13



நமது சோதனைகள் நமக்கு மட்டும் தனித்தன்மையுடன் உள்ளவை அல்ல என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். நாம் மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட சோதனை வழியாக செல்கிறோம் என்பதல்ல. பிற தேவ மனிதர்களும் இதனூடாக கடந்து செல்கிறார்கள். தேவன் உண்மையுள்ளவர். நம் திராணிக்குமேல் நாம் சோதிக்கப்பட அவர் விடமாட்டார். நமக்கு வரும் ஒவ்வொரு பாடும் எப்படியாயினும் தேவனின் திட்டத்திலும் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அது நிச்சயம் நம்மை அழிக்க அவர் அனுமதிக்கமாட்டார். தடகள வீரர்களைப் பயிற்றுவிக்கக் கொடுக்கப்படும் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று அவர்களது சொந்தத் திறனுக்கு அப்பாலும் செயல்பட அவர்களைப் பழக்குவிப்பதே. இதற்காக, அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியின் அழுத்தத்தை சிறிது சிறிதாக அதிகரிக்கிறார்கள். இதன்மூலம் அந்த தடகள வீரர்கள் தங்களால் இன்னும் அதிகம் செயல்படமுடியும் என்று நினைப்பது மட்டுமின்றி கூடிய விரைவில் அதைச் செயல்படுத்தியும் காட்டுகிறார்கள். இதைத்தான் தேவன் நமக்கும் செய்கிறார். அவர்மேல் மட்டும் நமது நம்பிக்கையை வைக்கவேண்டும் என்பதை நமக்குக் கற்றுக்கொடுக்கவும் அதன் மூலம் கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் வெளிப்படும் என்பதற்காகவும் சிறிது சிறிதாக நமக்குக் கொடுக்கும் அழுத்தத்தை அதிகமாக்குகிறார். ஆனால் நம்மால் தாங்கக்கூடாத அழுத்தத்தை அவர் நம்மேல் சுமத்தமாட்டர் என்பதை நாம் நினைவில் வைக்கவேண்டும். நாம் சோதிக்கப்படும்போது, சோதனையோடேகூட அதற்குத் தப்பித்துக்கொள்ளும்படியான வழியையும் அவர் உண்டாக்குவார். அது என்ன வழி? அது விசுவாசம், நம்பிக்கை மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படியும் வாழ்க்கையே!

அன்பானவர்களே, ஒன்றை நாம் கவனிக்கவேண்டும்  ஆண்டவர் நம்மை சோதனையிலிருந்து விடுவிப்பார் என்று பவுல் கூறவில்லை. அவர் அப்படியும் செய்யக்கூடும். ஆனால், தாங்கும்படியான கிருபையை தேவன் நமக்குத் தருகிறார் என்று பவுல் இங்கு கூறுகிறார். தேவன் நமது சூழ்நிலைகளை மாற்றாமல் இருக்கலாம். ஆனால் சூழ்நிலைகளைப்பற்றிய நமது மனப்பாங்கை மாற்றுகிறார். இதன்மூலம், நாம் சோதனையைத் தாங்கி, தொடர்ந்து முயன்று, முன்சென்று பரிசுத்தத்தில் வளருகிறோம். நமது ஆவிக்குரிய ஓட்டத்தை ஓடுவதற்கான தகுதியை நாம் இழந்துபோகமாட்டோம்.
ஜெபம்: ஆண்டவரே, சோதனைகளை, பாடுகளைச் சந்திக்கையில், நான் மட்டுமே இதனூடாகச் செல்கிறேன் என்று மனம் சோர்ந்துபோகாதிருப்பேனாக. என்னைக் கிறிஸ்துவைப்போல மாற்றவும், உம்மை மட்டும் நம்பவுமே இவைகள் எனக்கு வருகின்றன என்று நான் விசுவாசிக்க எனக்கு உதவும். ஆமென்.
 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page