வியாழன், மார்ச் 13 || சிட்சிப்பதன் மூலம் தேவன் நம்மைச் சீர்ப்படுத்துகிறார்
- Honey Drops for Every Soul
- Mar 13
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 26: 1-23
... அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சி(க்கிறார்)... - எபிரெயர் 12 : 5, 6
தேவன் தமது குமாரர் குமாரத்திகளது வாழ்க்கையை தாம் எண்ணியபடி அமைக்க, தம் சிட்சிப்பின் மூலம் மென்மையாகவும் உறுதியாகவும் சீர்ப்படுத்துகிறார். சிலவேளை அவர் தம்முடைய ஊழியர்களைக் கடின பாதையில் நடத்தி, தாம் வைத்திருக்கின்ற ஊழியத்துக்கென்று பூரணமாக்கி, தயார்ப்படுத்துகிறார். பவுல் அப்போஸ்தலனின் வாழ்க்கை இதற்கு சரியான உதாரணம்! கரடுமுரடான கல்லைப்போல இருந்த பவுலுக்கு மெருகூட்டல் அதிகமாகத் தேவைப்பட்டது. தேசத்தின் நலனைக் கருத்தில்கொண்டு, கிறிஸ்தவ சமுதாயத்தை அழிக்க அவர் வைராக்கியம் கொண்டார். ஆனால் தேவனோ, பவுலின் முயற்சியை திடீரென நிறுத்தினார்! பவுலின் வாழ்வைத் தமது ராஜ்ஜியத்தின் பணிக்கென முற்றிலுமாக மறுசீரமைத்து அவரைத் தகுதிப்படுத்துவதே தேவனுடைய திட்டம். காட்டுக் குதிரையை பழக்கப்படுத்துகிறது போல இதற்குக் கடின முயற்சி தேவைப்பட்டது. பவுலுக்கான பயிற்சி முறை எப்படி இருந்தது? அவர் இரட்சிக்கப்பட்ட பிறகுதான் அது தொடங்கிற்று என்று அப்போஸ்தலர் 9ம் அதிகாரம் தெளிவாக்குகிறது. அவர் எல்லாருக்கும் கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்; விசேஷமாக யூதருடைய தேவாலயத்தில் தைரியமாகப் பிரசங்கித்தார். (அப்போஸ்தலர் 9:20) கேட்டவர்கள் எல்லாம் அவரது மாறின வாழ்க்கையைக்குறித்து, அவர் பிரசங்கத்திலிருந்த வல்லமையைக் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்! ஆனாலும், அவர் எங்கெங்கு சென்றாலும் பலவிதமான எதிர்ப்புகள் பாடுகளைச் சந்திக்கவேண்டியிருந்தது. (2 கொரிந்தியர் 11:23-29)
அன்பானவர்களே, கொடுமைக்காரனும் கலகக்காரனுமாய் இருந்த மனுஷனைத் தேவன் எடுத்து, அவரைத் தமது ஊழியத்துக்காகப் பூரணப்படுத்தும்படி, நீடித்த கடினமான பயிற்சிகளிலே நடத்தினார்; ஆனால், பவுல் எந்தவிதமான குறையும் கூறாமல், தன்னுடைய வாழ்விலே கர்த்தர் தமது நோக்கத்தை நிறைவேற்ற எதையெல்லாம் கொண்டுவந்தாரோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். நமது நிலை எப்படி? நம் வாழ்வில் தேவன் எதைச் செய்கிறாரோ அதை கேள்வியேதும் எழுப்பாமல், அவர் நம் வாழ்வில் அவரது பூரண திட்டத்தை நிறைவேற்ற, அப்படியே நாம் ஏற்றுக்கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னைச் சீர்ப்படுத்தும்போது, உமது ஊழியத்துக்காக என்னை மாற்றுகிறீர் என்று உணர உதவும். நீர் எனக்காகத் தெரிந்துகொண்ட பாதை கடினமாயிருந்தாலும் அதற்கு என்னை ஆர்வமுடன் கீழ்ப்படுத்துவேன், ஏனெனில், அதனால் என் வாழ்வில் உம் நோக்கத்தை நிறைவேற்றுவீர். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments