வாசிக்க: யாக்கோபு 1:3,4
சோதனைகளுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்!
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு... ஜீவகிரீடத்தைப் பெறுவான்.- யாக்கோபு 1:12
நம் வாழ்வில் பலவிதமான சோதனைகள் ஏற்படும்போது, ஏன் கர்த்தர் அவற்றை நம் வாழ்வில் அனுமதிக்கிறார் என்று எண்ணி குழம்பிப்போகிறோம். ஆனால், கர்த்தர் எதையுமே ஒரு நோக்கத்துடன்தான் செய்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். முதலாவது, இயேசுவண்டை இன்னும் நாம் கிட்டிச் சேர்வதற்காக அவர் இவற்றை அனுமதிக்கலாம். நாம் சோதனைக்குட்படும்வரை தேவனைத் தேடுவதில்லையே! எல்லாம் நலமாக இருக்கும்வரை நம்மால் எதையும் சாதிக்கமுடியும் என்றும், எதுவும் நம்மைப் பாதிக்கமுடியாது என்றும் நம்புகிறோம். ஆனால், ஏதாவது பிரச்சனைகள் வந்து அவற்றை நாம் சமாளிக்கமுடியாமல் திணரும்போதுதான் நம் குறைபாடுகள் பலவீனங்கள் நமக்குத் தெரிகிறது. அப்போதுதான் நமக்கு கர்த்தருடைய நினைவே வருகிறது. இரண்டாவது, நம்மை அவரது வார்த்தைக்கு நேராகத் திருப்பி ஜெபசிந்தையை உருவாக்கவும் சில பாடுகளை அனுமதிக்கிறார். எப்போது வேதபுத்தகம் நமக்கு மிகவும் அருமையானதாகத் தோன்றுகிறது என்று யோசித்துப்பாருங்கள். சோதனையான நாட்கள் வரும்போது நாம் செய்தித்தாளைத் தேடுவதில்லை. வேதப்புத்தகத்தையே நாடுகிறோம். ஏனெனில் அதன் மூலமாகத்தான் அவர் நம்மோடு பேசி நமக்கு பாதையைக் காட்டுகிறார்; ஆறுதல் அளிக்கிறார்; தப்பித்துக்கொள்ள வழி செய்கிறார். மேலும் நாம் ஜெபிக்கும்போது வழக்கமாக என்னை ஆசீர்வதியும் எனக் கேட்கிறோம், ஆனால், கடினமான சூழ்நிலைகளின்போது, நம் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கும்போதுதான் மெய்யாகவே நாம் மனம்விட்டு கர்த்தரிடம் பேசுகிறோம்.
அன்பானவர்களே, நம்மைப் பரிதாபத்துக்குரியவர்களாக்கும்படி கர்த்தர் நம் வாழ்வில் பாடுகளை அனுமதிப்பதில்லை. மாறாக, நாம் உருவாக்கப்படவேண்டுமென்றே அப்படிச் செய்கிறார். பாடுகளினால் நாம் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம். நாம் பாடுகளினூடே சென்று அவற்றைக் கடந்துவந்த பின்னர்தானே கர்த்தர் என்னோடுகூட இருந்து என் பாடுகளில் என்னைத் தப்புவித்து என்னை விடுவித்தார். உங்களையும் அப்படியே அவர் பாதுகாத்து விடுவிப்பார் என்று முழுநிச்சயமாய் சொல்லமுடியும். எனவே பாடுகளைக் கண்டு பயந்துவிடாமலும், மனம் தளராமலும் இருப்போம். கர்த்தரிடம் நெருங்கிச் சேர்ந்து அவர் அனுமதிக்கும் பாடுகளுக்காக ஸ்தோத்திரம் செலுத்தி, ஜெபித்து, அவர் வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டு விடுதலை பெற்றுக்கொள்ளுவோம். நாம் பாடுகளை மிதித்து ஜெயம் பெறுவோம். அவைகள் நம்மை நசுக்குவதில்லை.
ஜெபம்: ஆண்டவரே, நான் சந்தித்த கடுமையான பாடுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவற்றின் மூலம் உம்மையும் உமது வார்த்தையையும் அதிகமாக அறியவும், உம் வல்லமையைப் பெற்று, பாடுகளைக் கடந்து வெற்றியுடன் வெளிவரவும் உதவுகிறீர் என விசுவாசிக்கிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments