வாசிக்க: யாக்கோபு 3:1-12
உங்கள் நாவை அடக்குங்கள்!
கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
- சங்கீதம் 141:3
அதிகமாகப் பேசுகிற ஒரு மனிதன் பாவம் செய்வதற்கான வாய்ப்பு அதிகம். சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான் என்று நீதிமொழிகள் 10:19 கூறுகிறது. நீதிமொழிகள் 21:23ல், தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான் என்று வாசிக்கிறோம். எனவே, நமது நாவைக் கட்டுப்படுத்தவேண்டியது மிகவும் அவசியம். யாக்கோபு, நாவானது சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும் என்று கூறுகிறார். (யாக்கோபு 3:5) மேலும், நாவைக் கப்பலில் உள்ள சுக்கானுக்கு அவர் ஒப்பிடுகிறார்; மிகப்பெரிய கப்பல்களும் மிகச் சிறிய சுக்கானால் திருப்பப்படுகின்றன. அதைப்போல, மிகச்சிறிய நாவும் ஒரு மனிதனை அழிவிற்கு நேராகவோ அல்லது உயர்வுக்கு நேராகவோ நடத்தும் வலிமை படைத்ததாயிருக்கிறது. ஒரு சிறிய தீப்பொறியானது ஒரு பெரிய காட்டையே கொளுத்திவிடுவதைப்போல தேவையற்ற வார்த்தைகள் ஒரு மனிதனுடைய நற்பண்பை முற்றிலும் அழித்துவிடுகிறது. எனவேதான், நாம் கேட்கிறதற்குத் தீவிரமாயும் பேசுகிறதற்குப் பொறுமையாகவும் இருக்கவேண்டுமென யாக்கோபு அறிவுறுத்துகிறார். (யாக்கோபு 1:19) கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கேற்ற நல்ல வார்த்தைகளையே பேசுங்கள் என பவுல் எபேசு விசுவாசிகளை எச்சரிக்கிறார். (எபேசியர் 4:29) அதுமட்டுமின்றி வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் ஒரு விசுவாசியின் வாயிலிருந்து வருவது தகாது என்றும் கூறுகிறார். (எபேசியர் 5:4)
நண்பர்களே, தகாத பேச்சினால் தங்களது சாட்சியை இழந்துபோகும் அநேக விசுவாசிகளை நாம் இன்று காண்கிறோம். ஆண்டவர் இயேசு, தாங்கள் பேசும் வீணான வார்த்தைகளைக் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே நாம் ஒவ்வொருவரும் கணக்கொப்புவிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். (மத்தேயு 12:36) எனவே, தேவையற்ற வார்த்தைகளைப் பேசாமல் நாம் மிகவும் ஜாக்கிரதையாயிருப்பது அவசியம். நலமானவைகளைத் தவிர வேறெதையும் பேசாமலிருப்போம். மற்றவர்களைக்கட்டி எழுப்பும் வார்த்தைகளையே நாம் பேசுவோம். அப்போதுதான் நம் கிறிஸ்தவ நற்பண்பு வெளிப்படும்; சாட்சி காக்கப்படும்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எனது சரீரத்தில் நாவை ஒரு அங்கமாகக் கொடுத்த உமக்கு நன்றி செலுத்துகிறேன். எனது நாவை உம்மைப் போற்றிப்பாட உம் வார்த்தையைப் பேச, மற்றவர்களைக் கட்டி எழுப்ப நான் பயன்படுத்த எனக்கு கிருபை தாரும். தேவையற்ற பேச்சைப் பேசாதிருக்க உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments