வாசிக்க: ரோமர் 12: 1,2
நமது மனங்கள் தொடர்ச்சியாய் மறுரூபமாகட்டும்
... உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். - ரோமர் 12:2
ரோமர் 12:2ல் பவுல் கூறிய வார்த்தைகளின் சாராம்சத்தை நாம் இப்படிக் கூறலாம் - உங்கள் நடத்தையை மாற்றும்படிக்கு உங்கள் மனதை நீங்கள் மாற்றுங்கள். ஒரு அனுபவம் வாய்ந்த கணினி பொறியாளர், பழுதான கணினியின் செயல்முறைகளை மறுசீரமைக்கும்போது, கணினியில் உள்ள பழைய செயல்முறை விளக்கங்களை முழுதும் அழித்துவிட்ட பிறகு புது செயல்முறை விளக்கங்களைப் பொருத்துவார்கள் என்று கூறினார். இதுபோல ஒரு கிறிஸ்தவனது மனதில் பழைய செயல்முறை அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் புது செயல்முறை பொருத்தப்படவேண்டும். நாம் விசுவாசிகளாகும்போது, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் மாறுகிறோம். ஆனால், அந்த மறுரூபம் முழுமையல்ல; அதில் பெருமளவு இன்னமும் மாற்றப்படவேண்டும். நம்முடைய மனதை மாற்றுவது நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நாம் அதனிடம், மனமே, நீ மறுரூபமாகு என்று கூறினாலும் நமக்கு அது கீழ்ப்படியாது. ஆனால், நாம் சில காரியங்களைச் செய்தால் நம் மனது மற்றவற்றால் மாற்றம் பெறும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஒரு இரும்புக் கம்பி துரு பிடிக்கவேண்டுமென நாம் விரும்பினால், இரும்பே, துரு பிடி என்று சொல்லி அப்படியே ஆகும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. ஆனால், அதன்மேல் நாம் கொஞ்சம் உப்பைத் தடவி, ஈரமான இடத்தில் வைத்து, காத்திருந்தால் அது நிச்சயம் துருப்பிடித்துவிடும். நாம் அதுபோல முயற்சிக்கலாம். கிருபையால் இரட்சிப்பு பெற்ற நாம், நல்ல சூழலில் இருந்து, சரியான காரியங்களைச் செய்தால், நம்முடைய மனதும் அதை உணர்ந்து - கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கும். மறுரூப சூழல் என்பது, விசுவாசிகளின் ஐக்கியம், ஜெபக் கூடுகைகள் போன்ற சரீரப் பிரகார சூழலல்ல. இவை முக்கியம்தான். ஆனால், மனம் மறுரூபம் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை வேதாகமம் விளக்குகிறது.
அன்பர்களே, ஜெயங்கொள்ளுபவர்களாக நாம் இருக்க விரும்பினால், முதலாவது இயேசுவை நம்முடைய வாழ்வில் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, தேவ வார்த்தையைப் பின்பற்றி நடக்கவேண்டும். மறுரூபம் என்பது ஒரே நாளில் நடக்கின்ற காரியமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம் வாழ்நாள் முழுவதும் இதற்கான செயல்முறை தொடர்ச்சியாய் நடைபெற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.
ஜெபம்: ஆண்டவரே, மனம் புதிதாகும்படி நான் விரும்பினால், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர் என்று அறியும்படி, உம் வசனத்தை வாசித்து, கவனமாய் அதைப் பின்பற்ற வேண்டும். மேலும், என் எதிரியையும் அறிந்து, அவனை விட்டோடி, நல்ல சூழ்நிலையில் நான் இருந்து, விசுவாசத்தில் அதிகரித்தல் வேண்டும். இதை எனக்கு நீர் கற்பித்தபடியால் உமக்கு என் நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments