வாசிக்க: எஸ்தர் 6:1-13
நமக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே போகும்!
... தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?- ரோமர் 8:31
ஆமான் அகாஸ்வேரு இராஜாவினால் உயர்ஸ்தானத்தில் வைக்கப்பட்டபோது, அவனை எல்லா பிரபுக்களும் பணிந்துகொண்டனர். ஆனால் மொர்தெகாய் அவனைப் பணிந்துகொள்ளாததால், ஆமான் அவன்மேல் கடுங்கோபம் கொண்டு, எப்படியாகிலும் மொர்தெகாயைத் தூக்கிலிட்டு அழித்துவிட ஒரு திட்டமிட்டான். அவனை மாத்திரமல்ல, முழு யூதகுலத்தையே அழிக்க ஆமான் நினைத்தான். ஆனால், இப்படி திட்டமிட்டுக் கொண்டிருந்தபோதே, ஆண்டவர் மொர்தெகாயின் பக்கமாக இருந்து செயலாற்றினார். எஸ்தர் 6:1ல், அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது என்று வாசிக்கிறோம். அப்போது மொர்தெகாய் ஒருசமயம் எப்படி ராஜாவின் உயிரைப் பாதுகாத்தான் என்று அறிந்து, அவனுக்கு ஏதாவது செய்யப்பட்டதா என்று தன் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். சரியாக அதே நேரத்தில் மொர்தெகாயைத் தூக்கிலிட அனுமதி கேட்பதற்காக ஆமான் உள்ளே வந்தான். அவன் வாயைத் திறப்பதற்கு முன்னரே, ராஜா அவனிடம், ராஜா கனப்படுத்த விரும்புகிறவனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான். ஆமான் தன்னைத்தான் ராஜா கனம் பண்ணவிரும்புகிறார் என நினைத்து, அவனுக்கு ராஜவஸ்திரம் தரித்து, ராஜாவினுடைய குதிரையில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு, ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என சொன்னான். ஆனால், நீ போய் மொர்தெக்காய்க்கு அந்தப்படியே செய் என்று ராஜா கூறியதைக் கேட்ட ஆமான் அதிர்ந்துபோனான்.
அன்பானவர்களே, சாத்தான் தேவ ஜனத்திற்கு எதிராக செயல்பட தன் ஆட்களை பயன்படுத்துகிறான். மொர்தெகாய்க்கு எதிராக ஆமானைப் பயன்படுத்தினான். ஆனால், கர்த்தரோ துணைநின்று எல்லா சதிகளையும் தகர்த்துப்போட்டு, மொர்தெகாயை ஆசீர்வதித்து கனப்படுத்தினார். எனவே, நாமும் சாத்தானுடைய சதிகளுக்கு மிரளாமல், சர்வவல்ல தேவன் நம்மோடு இருக்கிறார்; அவர் நமக்கு எல்லாவற்றையும் நன்மையாக மாறச்செய்வார் என்று உறுதியாய் நம்புவோம்.
ஜெபம்: பிதாவே, சாத்தான் என்னை அழிக்க வகைதேடினாலும் அவனால் என்னைச் சேதப்படுத்தமுடியாது என்று உறுதியாய் அறிந்திருக்கிறேன். ஏனெனில் நீர் என்னோடு இருக்கிறீர் என்றும் அவனது ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே போகப்பண்ணுவீர் என்றும் விசுவாசிக்கிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments