top of page

வியாழன், டிசம்பர் 12 || தெளிதேன் துளிகள்


கிறிஸ்துவின் சுவிசேஷம் முழு உலகத்துக்கும் உரியது!


... சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து .. - மத்தேயு 28:19


  கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் சுவிசேஷப்பணி ஆற்றவேண்டும்? முதலாவது, நம் ஆண்டவர் இயேசு தனித்தன்மையுள்ளவர். அவர் நமக்கு மட்டுமல்ல. உலகமுழுவதற்கும் இரட்சகர். எனவே, அவரை நாம் உலகம் முழுவதற்கும் அறிவிக்கத்தான் வேண்டும். அதுமாத்திரமல்ல, திரித்துவ தேவனாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய மூவொரு கடவுள்தான் சுவிசேஷப்பணியாற்ற மக்களை உருவாக்கி தம் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். பழைய ஏற்பாட்டில் உடன்படிக்கையின் தேவனாகிய இஸ்ரவேலின் தேவன் எல்லோருக்கும் பிதாவாகக் குறிப்பிடப்படுகிறார். இரண்டாவதாக, சுவிசேஷங்களில் இயேசு கிறிஸ்துவை நாம் பாவிகளின் இரட்சகராகக் காண்கிறோம். அவர் தமது மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் ஆவியானவரின் அருட்கொடை ஆகியவற்றின் மூலம் தான் அருளும் இரட்சிப்பு உலகமுழுவதிற்கும் அறிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். எனவேதான் அவர் தன் சீஷர்களிடம், உலகம் முழுவதிற்கும் சென்று நற்செய்தி கூறி, தமது போதனைகளைச் சொல்லி எல்லா மனுஷரையும் சீஷராக்கி, ஞானஸ்நானத்தின்மூலம் கிறிஸ்துவோடு ஐக்கியமாக்கும்படி கட்டளை கொடுத்தார். (மத்தேயு 28: 19,20) மூன்றாவதாக, அப்போஸ்தலர் நடபடிகளில், ஆவியானவரின் கிரியைகளை நாம் அறிகிறோம். ரோலண்ட் ஆலன் என்பவர், அப்போஸ்தலருடைய நடபடிகள் ஆவியானவரை ஒரு மிஷனரியாக வெளிப்படுத்துகிறது என்று கூறுகிறார். நான்காவதாக, பவுல் அப்போஸ்தலனது நிருபங்கள், சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து உலகிற்கு கிறிஸ்தவத்தின் போதனைகளை உலகிற்குக் காட்டவேண்டியதன் அவசியத்தைக் கூறுகின்றன. ஐந்தாவதாக, வெளிப்படுத்தின விசேஷம் இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் உலகின் எல்லா ஜாதிகளிடமிருந்தும் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது. 

எனவே, அன்பான நண்பர்களே, நாம் சுவிசேஷப்பணியைக்குறித்து அசதியாயிராமல் கர்த்தர் தந்த பிரதான கட்டளையை நிறைவேற்றுகிறவர்களாக வாழ்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, மிஷனரி தரிசனம் உமது இதயதாகம் என்றும், நீரே அந்த பாரத்தை எங்கள் உள்ளங்களில் ஊற்றுகிறீர் என்றும் அறிந்தேன். உலகக் காரியங்களில் ஈடுபட்டு உம் காரியத்தை அல்லத் தட்டாமல், சுவிசேஷப்பணியை நீர் அனுப்புமிடத்தில் செய்ய எனக்கு கிருபை தாரும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page