வியாழன், ஜனவரி 30 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 30
- 1 min read
கண்ணே நீ பார்ப்பது என்ன என்ன!
கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; ... -மத்தேயு 6:22
ஒரு மனிதனுடைய குணாதிசயத்தை அப்படியே பிரதிபலித்துக் காட்டுவது அவனது கண்களே! நாம் எப்படி நமது கண்களைப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் நாம் எப்படி உருவாகப்போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது. இன்றைக்கு தொலைக்காட்சிப் பெட்டி அநேகமாக அனைவருடைய வீடுகளை மாத்திரமல்ல, மனங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் என்ற கேள்வியை நம்மில் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ளவேண்டும். உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும் என்று இயேசு சொன்னார். தேவையற்ற காட்சிகளை நாம் பார்க்கும்போது கெடுவது நம் கண்கள் மட்டுமல்ல, நமது மனமும், அதன்வழிச் செய்கைகளால் நமது முழு சரீரமும் கெட்டுப்போகின்றன. மத்தேயு 5:28,29 வசனங்களில், நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது நலமாயிருக்கும் என்று இயேசு கூறுவதைக் காணலாம். யோபு 31:1 சொல்கிறது: என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? ஆம்! நாம் நமது கண்களோடு உடன்படிக்கை செய்கிறவர்களாயிருக்கவேண்டும். தாவீது தன் ஆண்டவரை நோக்கிப்பார்ப்பதே தன் வாழ்வின் வாஞ்சை என்று கூறுகிறார். நமக்கு அப்படிப்பட்ட ஆசை, வாஞ்சை இருக்கிறதா?
அன்பானவர்களே, நமது கண்களுக்கு காவல் வைக்கும்படி நம் ஆண்டவரை வேண்டிக்கொண்டு, பரிசுத்தமாய் வாழ்வோம்.
ஜெபம்: தேவனே, என் கண்களை உலகக்காரியங்களுக்கு விலக்கி வாழும் கிருபையை எனக்குத் தாரும். எனது கண்களோடு ஒரு உடன்படிக்கை செய்து இச்சையைத் தூண்டும் காரியங்களைப் பாராமல், தவறான நோக்கத்துடன் யாரையும் பாராமல் பரிசுத்தமாய் வாழ உமதாவியானவர் உதவுவாராக. ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments