top of page

வியாழன், ஜனவரி 23 || தெளிதேன் துளிகள்


உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கும்!


இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். (மாற்கு 10:51)



எரிகோவில் வசித்த பர்திமேயு என்ற குருடன் அந்த வழியாக வந்த இயேசுவை நோக்கி, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டபோது, அங்கிருந்தவர்கள் அவனை அமைதியாக இருக்கும்படி அதட்டினார்கள். ஆனால் பர்திமேயு சும்மாயிருக்கவில்லை. முன்னிலும் அதிக சத்தத்தோடு தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் எனக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். இயேசு நின்று நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று இருக்கிறாய் என்றபோது, நான் பார்வையடையவேண்டும் என்று அவன் தெளிவாகத் தன் தேவையைக் கூறுவதைப் பார்க்கிறோம். அந்த பதில், ஆண்டவரின் வல்லமைமீது அவனுக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியது. அவர் அவனிடம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்தான்.



அன்பானவர்களே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்ற அவரது வார்த்தைகள் இன்றும் உண்மையாயிருக்கின்றன. அவரது இரக்கம், கிருபை மற்றும் அவரது வல்லமை இன்றைக்கும் மாறாதவையாக இருக்கின்றன. எனவே, பர்திமேயுவைப்போல நாமும் அவரை நோக்கிக் கூப்பிடத் தயங்கத் தேவையில்லை. 1 யோவான் 5:14,15, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக்கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம் என்று கூறுகிறது. எபேசியர் 3:12ல் பவுல், அவரைப்பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியம் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது என்று எழுதுகிறார். எனவே, நாம் தைரியமாக நமது பயம் மற்றும் கவலைகளை உதறித்தள்ளிவிட்டு அவரை கிட்டிச்சேர்வோம். அவரே நம் பரிகாரி, அவரே நம்மைப் போஷிக்கிறவர், அவரே நம்மைப் பாதுகாக்கிறவர், அவரே நம்மை விடுவிக்கிறவர். அவரை நாம் தைரியமாகக் கூப்பிடலாம். உடனே அவர் இரங்கி நமக்கு உதவி செய்து நமது விசுவாசத்தின்படியே நமக்குப் பலனளிப்பார்.


ஜெபம்: கர்த்தாவே, பர்திமேயுவை நோக்கிப்பார்த்த இயேசுவிடம்தான் அன்று எத்தனை கரிசனை, இரக்கம்! அவனைப் பார்த்து, நான் உனக்கு என்ன செய்யவேண்டும் எனக் கேட்டாரே! இன்று நானும், என் பிரச்சனையிலிருந்து விடுதலையாகவேண்டும் என ஜெபிக்கிறேன். பதில் தாரும். ஆமென்.
 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page