வாசிக்க: ஆதியாகமம் 21: 8-14
ஆபிரகாமின் நிகரற்ற கீழ்ப்படிதல்!
கர்த்தருக்குக் கீழ்ப்படிபவன் அவரை விசுவாசிக்கிறான். கர்த்தரை விசுவாசிக்கிறவன் அவருக்குக் கீழ்ப்படிகிறான் என்று சி.ஹெச் ஸ்பர்ஜன் கூறுகிறார். ஆபிரகாம் அசையாத விசுவாசத்தையும், ஒப்பில்லாத கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்தினான்.
ஆதியாகமம் 12:1ல், அவனது சொந்த தேசத்தையும் இனத்தாரையும் விட்டு தான் காண்பிக்கும் தேசத்திற்குப் போகும்படி கர்த்தர் உரைத்தபோது, ஆபிரகாமுக்கு அது கடினமான காரிமாக இருந்தாலும், கொஞ்சமும் தயங்காமல் அவர் தனக்குச் சொன்னபடியே புறப்பட்டுப்போனான்.
(வச 4) இரண்டாவதாக, ஆதியாகமம் 13ம் அதிகாரத்தில், லோத்து பசுமையான நிலப்பரப்பைத் தெரிந்துகொண்டு, ஆபிரகாமைவிட்டுப் பிரிந்துபோனபிறகு, கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுப்பேன் என்று கூறினார். உடனே, கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஆபிரகாம் தன் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோனதாக வாசிக்கிறோம். (வச 18) ஆதியாகமம் 17ல், ஆபிரகாமுக்குக் கர்த்தர் இட்ட கடினமான கட்டளையை வாசிக்கிறோம். இந்த முறையும் ஆபிரகாம் முற்றிலும் கீழ்ப்படிந்தான். தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான் என்று 23ம் வசனம் கூறுகிறது. 26ம் வசனத்தில் ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள் என்றும் வாசிக்கிறோம். அச்சமயத்தில் 99 வயதை எட்டிக்கொண்டிருந்த ஆபிரகாமுக்கு விருத்தசேதனத்துக்கு தன்னை உட்படுத்திக்கொள்வதென்பது எத்தனை அதிகமான வேதனை தந்திருக்கவேண்டும்! இவற்றைக் காட்டிலும் அவனது பிரியமான குமாரன் ஈசாக்கைப் பலியிட கர்த்தர் கட்டளையிட்டபோதும் அவன் சற்றும் தயங்காது, மறுநாள் காலையில் மோரியா மலைத்தேசத்தை நோக்கிப் பயணித்தான். அவனது கீழ்ப்படிதல் எத்தனை மேன்மையானது!
அன்பானவர்களே, ஆபிரகாம் தன் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்திருந்த நம்பிக்கையினிமித்தம் அவரது வார்த்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தான். எனவே, அவன் கர்த்தரால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டான். அப்படிப்பட்ட கீழ்ப்படிதலை நம்மிடமிருந்தும் தேவன் எதிர்பார்க்கிறார். நாம் என்ன செய்யப்போகிறோம்?
ஜெபம்: தேவனே, ஆபிரகாம் வெளிப்படுத்திய ஆச்சரியமான கீழ்ப்படிதல் அவனது நம்பிக்கையின் வெளிப்பாடே என்று அறிந்தேன். நானும் என் எல்லா சூழ்நிலைகளிலும், அவை எத்தனை கடினமாயிருந்தாலும், உமது வார்த்தையைச் சந்தேகியாமல் நம்பி முழுமையாகக் கீழ்ப்படிய கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments