வாசிக்க: சங்கீதம் 91: 1-16
நம் அடைக்கலமாகிய தேவன்மேல் பற்றுதலாயிருங்கள்
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
- சங்கீதம் 91:1
சங்கீதம் 91 பரிசுத்தவான்களின் பொக்கிஷங்களில் ஒன்று என்று காம்பெல் மார்கன் கூறுகிறார். அது உண்மை. ஏனெனில் போர்க்காலங்களில், சுகவீனங்களில், உபத்திரவங்களில், பல போராட்டங்களில் கணக்கிடமுடியாத ஆயிரக்கணக்கானோர் தேவனுக்கென்று வைராக்கியமாய் வாழ இந்த சங்கீதம் உதவுகிறது. தேவன்பேரில் பற்றுள்ளவர்களுக்கு வரும் ஆச்சரியமான பலனை இந்த சங்கீதம் கூறும்படி, ஒன்றிலிருந்து மூன்றாம் வசனம் வரை தேவனுடைய குணாதியங்களை நாமங்களாகச் சொல்லுகிறது. முதலாவது, உன்னதமானவர் என்பதன் எபிரெய வார்த்தை எலியோன் - வானத்துக்கும் பூமிக்கும் சொந்தக்காரர். இரண்டாவது, சர்வவல்லவர் என்பதன் எபிரெய வார்த்தை ஷடாய். கர்த்தர் கிருபையில் பெரியவர், நம் அனைத்துத் தேவைகளை முழுமையாகச் சந்தித்து, குறைவொன்றும் இல்லாமல் காப்பவர் என்கிறது. 2ம் வசனத்தில் தேவன் என்ற நாமத்தை நாம் வாசிக்கிறோம். இதன் எபிரெய வார்த்தை - யாவே அல்லது யேகோவா. உடன்படிக்கையைக் காக்கிறவர், என்றென்றைக்கும் இருக்கிறவராகவே இருக்கிறவர் - இருந்தவரும் இருப்பவரும் வருகிறவருமாயிருக்கிறவர், என்று அர்த்தப்படும். கடைசியாக, கர்த்தர். இதன் எபிரெய வார்த்தை ஏலோஹிம் - வானம் பூமியையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த சிருஷ்டிகரான தேவன் என்கின்ற நாமம்.
உன்னதமானவர் மற்றும் சர்வவல்லவர் என்ற நாமங்கள் தேவன் தரும் பாதுகாப்பை இருமுறை உறுதிப்படுத்துகிறது. உன்னதமானவர் என்பது எந்த எதிரியாலும் நெருங்கமுடியாத உயர்ந்த அடைக்கலமாகிய தேவன் என்று அர்த்தப்படும். உன்னதமானவரின் மறைவிலிருப்பவன் எந்தத் தீங்கும் தன்னை பாதிக்காதபடி தான் பாதுகாப்புடன் இருப்பதை உணர்வான். சர்வவல்லவர் என்பது, தாயின்மென்மையான இருதயத்தைப் பற்றிப் பேசுகிறது; தாய் தன் பிள்ளைகளைக் கவனிப்பதுபோல தேவனும் நம்மைக் கவனிக்கிறார் என்றும் நினைவுபடுத்துகிறது.
அன்பானவர்களே, இந்தத் தொடக்க வசனம், புது வருடத்தில் நுழைந்திருக்கும் நமக்கு ஆறுதல் அளிக்கிறதல்லவா? நாமும் சங்கீதக்காரன் போல நம்பிக்கையுடன், அவர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவோம்; உன்னதமானவரோடு இருந்து, சர்வவல்லவரின் நிழலில் தங்குவோம். சந்தேகத்துக்கிடமின்றி நாம் எதிரியின் கண்ணிகளில் சிக்காமல் அங்கே பாதுகாப்புடன் இருப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, நீர் என் அடைக்கலமாயுள்ளீர், நன்றி! நான் உம் மறைவில், உம் சிறகுகளின் நிழலில் தங்கி, உமது சத்தியமாகிய பலத்த கேடகத்துக்குள் பாதுகாப்பாய் இருப்பேன். அங்கே எதிரிகள் ஒருவரும் என்னைத் தொடமுடியாது என்ற நம்பிக்கையுடன் என் வாழ்நாள் முழுவதும் அங்கே இருப்பேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments