வியாழன், ஏப்ரல் 10 || ஜெபி, ஜெபி, ஜெபி - ஜெபிப்பதை விட்டுவிடாதே!
- Honey Drops for Every Soul
- 7 days ago
- 1 min read
வாசிக்க: கொலோசெயர் 4: 12,13
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:17
மைக்கேல் லக்கானிலாவோ என்பவர், ஜனங்கள் செய்கிற எல்லா ஆவிக்குரிய காரியங்களிலே, உலகம் முழுவதிலும் மிகவும் முக்கியமானது ஜெபிப்பதுதான் என்று கூறுகிறார். நாத்திகர்கள் கூட, மிகவும் துயரமான நாளிலே, என்னைக் காப்பாற்றும் என்று பல தெய்வங்களிடம் தீவிரமாக வேண்டுதல் செய்கின்றனர். அனைத்து மக்களும் வேண்டிக்கொள்கிறார்கள் என்றாலும், கிறிஸ்தவர்களான நாம் ஜெபத்தைக் கேட்பவரும், அதற்குப் பதிலும் தருகிறவருமான ஜீவனுள்ள தேவனிடத்தில் எப்படி ஜெபிக்கிறோம்? நம்மை உற்சாகமூட்டும் ஜெபவீரரை வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, கொலோசெயர் 4:12,13ல், எப்பாப்பிராவின் ஜெபவாழ்வைக் குறித்து நாம் வாசிக்கிறோம். எப்பாப்பிரா கொலோசெ சபையை நிறுவினவர். சிறையில் இருந்தபோதிலும், தம் மந்தைக்காக தாழ்மையுடன் விடாப்பிடியாக ஜெபித்தார். அவர் போராடி ஜெபித்ததற்கான ஒரே காரணம் - கொலோசெ விசுவாசிகள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாய், பூரண நிச்சயமுள்ளவர்களாய் நிலைநிற்கவேண்டும் என்பதற்காகவே! (கொலோசெயர் 4:12) அவர் ஒரு ஜெப வீரராயிருந்தபடியால், இன்றியமையாத வைராக்கியத்துடன், தளராது ஜெபித்தார்!
சீன உள்நாட்டு மிஷனை ஸ்தாபித்தவர், ஹட்சன் டெய்லர். நாற்பது ஆண்டு காலம் சீனாவில் மிஷனரிப் பணி ஆற்றிய அவர், நான் ஜெபிப்பதைக் காணாமல் சீனாவிலே சூரியன் உதிப்பதில்லை என்று சொன்னார். தான் வசித்துவந்த நகரிலே மிகப் பெரும் எழுப்புதலைக் கொண்டுவந்த ஒரு தேவமனிதர், நான் ஜெபத்தில் பல மணிநேரம் செலவிடுகிறேன். ஆனால், ஜெபஆவியோடு வாழ்கிறேன் - நடக்கும்போது நான் ஜெபிக்கிறேன், படுக்கும்போது நான் ஜெபிக்கிறேன், நான் எழும்பும்போதும் ஜெபிக்கிறேன். எப்போதுமே ஜெபத்துக்கான பதில்கள் வந்துகொண்டேயிருக்கிறது என்று சொல்லுகிறார். அன்பானவர்களே, ஜெபத்தில் வல்லமையுள்ளவர்களாயிருக்க நமக்குக் கடின உழைப்பு தேவை. ஜெபத்திலே வெற்றிபெற விரும்புகிறவர்கள் அதிகமாக முயற்சி செய்யவேண்டும் - நீண்ட மணிநேரம் கொடுக்கவேண்டும்; சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும்; அதிக கவனம் கொடுக்கவேண்டும். நாம் அந்தரங்கமாய்ச் செய்யும் தியாகத்தைக் கர்த்தர் பார்க்கிறார், கனப்படுத்துகிறார். நாம் ஜெபிக்கின்ற ஆண்களும், பெண்களுமாய் இருந்து ஆவியில் நிறைந்து ஜெபிப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, ஜெபத்தைப்பற்றி பேசுவதோடு நிற்காமல், சுற்றியிருக்கும் மக்களின் தேவைகளுக்காக நான் உண்மையாய் ஜெபிப்பேன். ஜெபத்தைச் சாதாரணமாக நினைக்காமல், அது சாத்தானுக்கு எதிரான மிக வல்லமையான ஆயுதம் என்று உணர்வேன். சரியான நோக்கத்துடன் ஜெபிப்பது உம்மைப் பிரியப்படுத்தும் என்பதால், நான் இனி இடைவிடாமல் ஜெபிப்பேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments