top of page

வியாழன், ஏப்ரல் 03 || உங்கள் வார்த்தைகளைக் குறித்த கவனம் தேவை




அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. ... அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். - 1 கொரிந்தியர் 10:6,10



இஸ்ரவேலர் ஏலிமிலிருந்து புறப்பட்டு சீன் வனாந்தரம் வந்தார்கள். அங்கே இஸ்ரவேலரனைவரும் முறுமுறுத்தார்கள். பன்னிரண்டு நீறூற்றுகளும் எழுபது பனைமரங்களும் இருந்த ஏலிமிலே அவர்கள் சௌகரியமாய் இருந்து அனுபவித்தார்கள்; எனவே, இந்த வெப்பம்மிகுந்த வனாந்தரத்திலே பாளயமிட அவர்களுக்குச் சற்றேனும் விருப்பமில்லை. தேவனை அவர்கள் நம்பவில்லை. கடந்தகாலத்தில் கர்த்தரிடம் தாங்கள் பெற்ற அற்புதங்களான - தங்களைப் பாதுகாத்த பகலின் மேகஸ்தம்பம், இரவின் அக்கினிஸ்தம்பம், மாராவில் நடந்த அற்புதம் இவற்றை - அவர்கள் சீக்கிரம் மறந்துவிட்டார்கள். காரியத்தை அவர்கள் தாழ்மையாய் மோசே, ஆரோனிடமும் தெரிவித்திருக்கலாம். ஆனால், மிகவும் மோசமாகப் பேசினார்கள். நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாக சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை என்று முறுமுறுத்தனர். (யாத்திராகமம் 16:3) இவை கர்த்தருக்கு விரோதமாக அவர்கள் பேசின அப்பட்டமான வார்த்தைகள்!


அன்பானவர்களே, நம் ஆவிக்குரிய பயணத்தில், தேவன் சில பரீட்சை பார்க்கும் சந்தர்ப்பங்களை அனுமதித்து, அவற்றை நாம் எப்படி எதிர்கொள்ளுகிறோம் என்று பார்ப்பார். எப்படி நாம் பேசுகிறோம் என்பதில் கவனமாயிருப்போமாக. நம் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் நாம் செல்லுமிடம் எது என்பதை நிர்ணயித்துவிடும். உண்மையில் இந்த இஸ்ரவேலர் கர்த்தரின் கரத்தினாலே வனாந்தரத்தில் மரித்துப்போயினர். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கர்த்தர் கேட்கிறார், நம்முடைய எல்லா நினைவுகளையும் அறிந்திருக்கிறார். 11,12ம் வசனங்களில் தேவன் மோசேயிடம், இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன் என்று கூறினார். நமக்கு எச்சரிக்கை தேவை! மனுஷருக்கு எதிராய் நாம் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். (மத்தேயு 12:36) அப்படியானால் தேவனுக்கும் அவருடைய இரக்கத்துக்கும் விரோதமாகப் பேசும் வார்த்தைகளுக்கு நாம் இன்னும் அதிகமாய்க் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்! தேவன் நம்மிடத்தில் கொண்டுவரும் சூழ்நிலைகள்பற்றி முறுமுறுக்காதபடி நாம் ஜாக்கிரதையாயிருக்கவேண்டும். நன்றியுணர்வு மிக்க அணுகுமுறைதான் முறுமுறுக்கும் ஆவிக்கு எதிரான மருந்து! 
ஜெபம்:  ஆண்டவரே, என் ஆவிக்குரிய பயணத்தில் கடின பாதைகளில் நான் நடந்தாலும், உமக்கு விரோதமாக முறுமுறுக்கக்கூடாது. கடந்தகாலத்தில் அற்புதங்கள் செய்த நீர், இந்தக் கடின சூழலிலிருந்து என்னை விடுதலையாக்கி, பாதுகாத்து, தேவைகளை சந்திப்பீர் என்ற நன்றியுணர்வு எனக்கு தேவை.  ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen
bottom of page