வாசிக்க: எபேசியர் 4: 17-24
வேசித்தனம் - கர்த்தருடைய பார்வைக்கு அருவருப்பு!
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்... - 1 கொரிந்தியர் 6:18
விபசாரம் செய்யாதிருப்பாயாக (யாத்திராகமம் 20:14) என்ற கட்டளை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கு முரியது.
திருமணம் என்ற பரிசுத்த உறவிலிருந்துதான் குடும்பம், சபை மற்றும் சமுதாயம் உருவாகிறது என்பதை சாத்தான் நன்கு அறிந்திருப்பதால்தான், எப்படியாகிலும் இந்தப் புனிதமான உறவைக் கெடுப்பதற்கு பல தீய திட்டங்களைத் தீட்டி செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவற்றில் ஒன்றுதான் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விசுவாச துரோகம் செய்து திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளைத் தேடும்படி அவர்களைத் தூண்டிவிடுவது. ஆண்டவர் இயேசு தமது மலைப்பிரசங்கத்தில், விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்று திட்டமும் தெளிவுமாகக் கூறியிருக்கிறார். வேசித்தன ஆவி மக்களைக் கொடிய பாவத்திற்கு அடிமைகளாக மாற்றிவிடுகிறது! இச்சையான நினைவுகள், வேசித்தனம், விபச்சாரம் இவைகள் யாவும் ஒரு மனிதனுடைய இருதயத்திலிருந்து புறப்பட்டு சரீரத்தைத் தீட்டுப்படுத்திவிடுவதோடு, அவனது ஆவி, ஆத்துமாவையும் கெடுத்துவிடுகின்றன. வேசித்தனம் மனுஷனுக்கு எதிரானதும், தேவனுக்கு எதிரானதுமான பாவமாக இருக்கிறது. எனவேதான் பவுல் 1 கொரிந்தியர் 6:13ல், சரீரமோ வேசித்தனத்திற்கு உரியதல்ல, கர்த்தருக்கே உரியது என்று கூறுகிறார். நமது சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்கள். அவற்றை நாம் வேசியின் அவயவங்களாக மாற்றக்கூடாது; வேசித்தனத்தினால் தீட்டுப்படுத்தக்கூடாது!
அன்பானவர்களே, இந்த உலகத்தின் வழிகளோடு நாம் ஒப்புரவாகிவிடாமல், விழித்திருந்து, நம்மை இச்சையடக்கத்துடன் காத்துக்கொள்ளுவோம். நமது இருதயத்தையும் சிந்தையையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் மன்னிப்பேயில்லாத இரண்டு பாவங்களாக கொலையும் வேசித்தனமும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்கும் மரணமே தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால், இன்று ஒருவேளை இந்தப் பாவங்களுக்கு நாம் உட்பட்டிருந்தால் சகல பாவங்களையும் சுத்திகரிக்க வல்லதாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட நம்மை ஒப்புக் கொடுப்போம். அவரது கிருபை இரக்கத்திற்காக மன்றாடுவோம்.
ஜெபம்: தேவனே, நீர் தாவீதை நேசித்தாலும், அவன் பத்சேபாளுடன் பாவம் செய்து, உரியாவையும் கொலைசெய்தபோது அவனைத் தண்டிக்கத் தயங்கவில்லை. உம்மைத் துக்கப்படுத்தும் எதிலும், விசேஷமாக வேசித்தனத்தில் நான் சிக்கிவிடாமல் என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி.
அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments