அவர் நம் சிருஷ்டிகர்; நம்மை முற்றிலும் அறிந்தவர்!
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்(தது). .. - யோபு 10:8
ஒரு இளைஞனின் கார் திடீரென பழுதடைந்து பாதி வழியில் நின்றுவிட்டது. அதைச் சரிசெய்ய அவன் தனக்குத் தெரிந்த எல்லா வழிகளிலும் முயற்சித்தும் பயனில்லை. சோர்வுடன் என்ன செய்வதென்று அறியாமல் நின்றிருந்தபோது, அந்தப் பக்கமாய் வந்த ஒரு வயதானவர் அவனிடம், தம்பி, உனக்கு ஏதாவது உதவி தேவையா என்று கேட்டார். அவன் விஷயத்தைச் சொன்னதும், அவர் வண்டியின் பானட்டைத் திறந்து எஞ்ஜினில் எதையோ செய்து, ஒரு சில நிமிடங்களில் சரிசெய்துவிட்டார். ஆச்சரியப்பட்ட அந்த இளைஞன், ஐயா, எப்படி உங்களால் விரைவாக சரிசெய்யமுடிந்தது என்று வினவினான். அதற்கு அவர், என் பெயர் ஹென்றி ஃபோர்ட்; இந்த வண்டியை வடிவமைத்தவன் நான்தான் என்றார்.
அன்பானவர்களே, கர்த்தர் நம் சிருஷ்டிகர். நம்மை அவர் முழுமையாக அறிந்திருக்கிறார். சங்கீதம் 139:13-15ல் தாவீது, நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்; நான் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை; என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என்று தான் விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டதை நினைத்து நன்றி கூறுவதை நாம் வாசிக்கிறோம். நமது கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அவர் முன்கூட்டியே அறிந்திருக்கிறார்.
ஏசாயா 46:9,10ல், நானே தேவன், அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எனவே, நாம் எதைக்குறித்தும் கலங்கத் தேவையில்லை. நம் எதிர்காலம் அவர் கைகளில் இருக்கிறது. அவர் நமக்கு இன்று கொடுக்கும் வாக்குத்தத்தம்: இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன். (ஏசாயா 43:1) தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். (ஏசாயா 46:3,4) இப்படியிருக்க, நம்மை உருவாக்கின தேவாதி தேவனைக் காட்டிலும் இப்பூமியில் நாம் நம்பக்கூடியவர்கள் எவருமில்லை என்பது எத்தனை நிச்சயம்!
ஜெபம்: பரமனே, நீர் என் சிருஷ்டிகர். எனது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் சகலத்தையும் நீர் அறிந்து உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர். நான் எதைக் குறித்தும் கவலைப்பட்டு கலங்கத் தேவையில்லை. நீரே என்னைப் பாதுகாத்து, பராமரித்து வழிநடத்தி வருவீர். உமக்கு நன்றி. ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி.
அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments