கேளுங்கள்! கூர்ந்து கவனியுங்கள்! தேவன் பேசுகிறார்!!
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார் (இயேசு).
- மாற்கு 4:9
எல்லாருக்கும் காதுகள் உண்டு! ஆனால் இயேசு இங்கே மாம்சப்பிரகாரமான காதுகளைக்குறித்துச் சொல்லவில்லை; அவர் ஆவிக்குரிய செவிகளைக்குறித்துச் சொன்னார். அவர் ஆழமாய்க் கேட்பதைக்குறித்து, காதுகளால் மட்டுமல்ல, மனது மற்றும் இருதயத்தால் கேட்பதைக்குறித்துச் சொன்னார். வார்த்தையை பெற்றுக்கொள்ளுவதற்கான எளிய வழி, அதைக் கேட்பதே! விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். (ரோமர் 10:17) நான்கு வித கேட்பவரை மத்தேயு 13:3-23 குறிப்பிடுகிறது - முதலாவது, கவனமின்றி கேட்பவர். இவர் வார்த்தையைக் கேட்கிறார், ஆனால் அதைப் பெற்றுக்கொண்டு, புரிந்துகொள்ளுகின்ற எண்ணம் இவருக்கு இல்லை. (வச.19); இரண்டாவது, மேலோட்டமாய் கேட்பவர். இவர் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும், தன் இருதயத்தில் வேரூன்ற விடுவதில்லை; மூன்றாவது, பலவற்றில் ஈடுபாடோடு கேட்பவர். இவரும் தற்காலிகமாக வார்த்தையை ஏற்றாலும், உலகக் கவலைகள், ஆசைகள் அதை நெருக்கிப்போடும்படி விடுகிறார். (வச. 22); நான்காவது, கனிகொடுக்கும்படி கேட்பவர். இவர் வார்த்தையை ஏற்றுக்கொண்டு, புரிந்துகொள்ளுகிறார், அதிகக் கனிகளைத் தருகிறார். (வச. 23)
இயற்கை ஆர்வலர் பரோ என்பவர் இரைச்சல் மிகுந்த தெருவில் நடந்துபோகும்போதும், புதரில் மறைந்துள்ள பாச்சைப்பூச்சி இடுகின்ற சத்தத்தைக் கேட்கிறார். இயற்கையில் ஏற்படுகின்ற மெல்லிய சத்தத்தைக் கேட்கின்ற வகையில் தன் காதுகளை அவர் கூர்மைப்படுத்தியிருந்தார்.
அன்பானவர்களே, நாம் எப்படி? நமது காதுகள் தேவனுடைய சத்தத்தைக் கேட்கத் தயாராய் உள்ளனவா? எப்போதெல்லாம் இயேசு, காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சொல்லுகிறாரோ, அதைக் கவனமாய்ச் செவிகொடுக்கிறவர்களுக்கே சொல்லுகிறார். வேறு விதமாகச் சொன்னால்: கேளுங்கள், கூர்ந்து கவனியுங்கள்! நாமும் சின்ன சாமுவேலைப்போல இருப்போம். சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று தேவனிடம் கேட்போம். (1 சாமுவேல் 3:10) நமக்குச் சொல்ல தேவனிடத்தில் அநேகம் உண்டு. எனவே, நாம் நமது செவிகளை அவரைவிட்டுத் திருப்பாமல், கவனமாகக் கேட்போம்.
ஜெபம்: ஆண்டவரே, உமது குரலை நான் கவனமாகக் கேட்பேன். கவனமின்றி கேட்பவனாயிராமல் கனிதருபவனாக உம் வார்த்தையைக் கேட்டு, அப்பியாசம் செய்து, மிகுந்த கனிகளை உமக்காகக் கொடுப்பேன். ஆவியில் அனலாயிருந்து நீர் சொல்லுவதை நான் கூர்ந்து கவனிப்பேன். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments