செப்டம்பர் 29 வாசிக்க: அப்போஸ்தலர் 16:25-34
சிலர் இரதங்களைக்குறித்து.. மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ.. கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம். (சங்கீதம் 20:7)
இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று சிறைச்சாலைத் தலைவன் பவுலிடம் கேட்டபோது, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி; அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று பதிலளித்தான் பவுல். ஒரு வேதாகம மொழிபெயர்ப்பு இப்படிக் கூறுகிறது - ஆண்டவராகிய இயேசுவில் நம்பிக்கை வை; நீ இரட்சிக்கப்படுவாய்! விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? நயகரா நீர்வீழ்ச்சியின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த முறுக்கேற்றிய கயிற்றின்மேல் சார்லஸ் ப்ளாண்டின் தனது கரங்களில் 40 பவுண்ட் எடையுள்ள கம்புடன் நடந்து அந்த பெரிய நீர்வீழ்ச்சியைக் கடந்தார். பின்பு, கூட்டத்திலிருந்த ஒருவரிடம், உங்களோடு இந்த நீர்வீழ்ச்சியை நான் கடக்கமுடியும் என விசுவாசிக்கிறீர்களா என்றார். ஆம் என்றவரிடம், அப்படியானால் வாருங்கள்; உங்களைச் சுமந்துகொண்டு இந்த நீர்வீழ்ச்சியைக் கடக்கிறேன் என்றார். அவரோ, மன்னிக்கவும்; உங்களை நம்பி உயிரைப் பணயம் வைக்க நான் தயாரில்லை என்றார். உடனே, ப்ளாண்டின் தனது குழுவின் மேலாளரான ஹென்றி கோல்கார்டிடம், ஹென்றி, நீங்கள் எப்படி? என்று கேட்டபோது அவர் தயக்கமின்றி, நான் முழுமனதோடு உங்களை நம்புகிறேன் என்றார். அப்படியானால் வாருங்கள் என்று கூறி அவரைச் சுமந்துகொண்டு நீர்வீழ்ச்சியைக் கடக்க ஆரம்பித்த ப்ளாண்டின், அடிமேல் அடியெடுத்து வைத்து முன்னேறிக்கொண்டிருந்தார். திடீரென யாரோ ஒருவன் அந்தக் கயிறை அறுத்துவிட்டபடியால் கயிறு பயங்கரமாக ஆட ஆரம்பித்தது. கோல்கார்டிடம், ஹென்றி, உங்களை என்னில் ஒரு அங்கம் என நினைத்துக்கொள்ளுங்கள்; நான் ஆடினால் நீங்களும் என்னுடன் ஆடுங்கள்! பாலன்ஸ் பண்ண முயற்சிக்காதீர்கள்! முற்றிலும் என்னை நம்புங்கள்; இல்லாவிட்டால் மரணம்தான் என்று சொல்லிவிட்டு ஆடிக்கொண்டிருந்த கயிற்றின்மேல் ஓடி மறுகரையை அடைந்தார் ப்ளாண்டின். மக்கள் மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தார்கள்! முதல் மனிதன் விசுவாசித்தான்; ஹென்றியோ தன் பூரண நம்பிக்கையை வெளிப்படுத்தினார்!
அன்பானவர்களே, இயேசு உங்களைப் பரலோகத்திற்குக் கூட்டிச்செல்வார் என்று நீங்கள் விசுவாசிப்பது போதாது. அவரை முழுமையாக நம்பினாலே ஒழிய நீங்கள் பரலோகம் சேர்வீர்களா என்பது சந்தேகமே. எனவே, விசுவாசிப்பதோடு, முழுநம்பிக்கையாக இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள்!
ஜெபம்: பிதாவே, உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னை இரட்சிக்கவே பூமிக்கு வந்தார் என நான் விசுவாசிப்பதோடு நிற்காமல், முழு இருதயத்தோடும் அவரை நம்ப கிருபை தாரும். என் பாரத்தை அவர்மேல் சாற்றிவிட்டு அவரைப் பற்றிக்கொண்டு பத்திரமாகக் கரைசேர எனக்கு உதவி செய்யும். ஆமென்.
Comments