செப்டம்பர் 30 வாசிக்க: தீத்து 3:1-8
நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்... (எபேசியர் 2:10)
ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த சோளத்தை ஒவ்வொரு வருடமும் அங்கு நடைபெறும் ஒரு கண்காட்சிக்குக் கொண்டு வந்து தவறாமல் பரிசைத் தட்டிச் செல்வார். அவர் தனது பக்கத்து வயலின் சொந்தக்காரர்களுக்கும் தான் வைத்திருக்கும் விதைச் சோளத்தைக் கொடுத்து விதைக்கச் சொல்லுவார் என்பதை அறிந்த ஒரு நிருபர் அவரிடம், ஐயா, எப்படி உங்களிடமிருக்கும் மிகச் சிறந்த விதைச் சோளத்தை மற்றவர்களுக்குக் கொடுக்க முடிகிறது. அப்படிச் செய்வதனால் பரிசு பெறும் வாய்ப்பை நீங்கள் இழக்கலாம் அல்லவா என்றார். அதற்கு அந்த விவசாயி, ஐயா உங்களுக்குத் தெரியாதா? காற்று வீசுகையில் அது மற்ற வயலில் விளைந்திருக்கும் சோளத்திலிருந்து மகரந்தத்தைச் சுமந்து வந்து என் வயலில் விதைத்திருக்கும் சோளத்தில் மகரந்த சேர்க்கை நடைபெறச் செய்து என் சோளத்தின் தரத்தையும் உயர்த்துகிறது. நான் தரமான சோளத்தை விளைவிக்க விரும்பினால், அவர்களும் தரமான சோளத்தை வளர்க்க நான் உதவவேண்டாமா என்றார்.
அன்பானவர்களே, அந்த விவசாயி தான் மற்றவர்களுக்குத் தரமான விதையைக் கொடுக்காவிட்டால், தம்மால் தரமான சோளத்தை வளர்க்கமுடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தார். நாம் நமது அயலகத்தாரோடு சமாதானமாய் வாழவிரும்பினால், அவர்கள் சமாதானமாக வாழ நாம் அவர்களுக்கு உதவவேண்டும். அவர்களுக்கு நன்மையான காரியங்களைச் செய்யவேண்டுமே தவிர எவ்விதத்திலும் தடையாயிருக்கக் கூடாது. நீயோ எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி என்று பவுல் தீத்துவுக்கு அறிவுறுத்துவதை தீத்து 2:7ல் வாசிக்கிறோம். மேலும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்க விசுவாசிகளுக்கு நினைவூட்டவேண்டுமென்றும் பவுல் கூறுகிறார். (தீத்து 3:1) நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப் பழக்கட்டும் என எழுதி முடிக்கிறார்! எனவே, நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் யாவருக்கும் நன்மை செய்வோம்; அதினால் வரும் மகிழ்ச்சியைப் பெற்று அனுபவிப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, நான் என் சுகத்தையே விரும்பிக்கொண்டிராமல், நீர் தந்த ஆசீர்வாதங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளக் கிருபை தாரும். அப்படிச் செய்து அவர்களது வாழ்வில் சந்தோஷத்தைக் கொண்டுவந்து நானும் மகிழ்ச்சியடைந்து நான் உம் பிள்ளை என்று நிரூபிக்க உதவி செய்யும். ஆமென்.
Very encouraging. Large fonts are easy to read comfortably. Thank you. God bless. 😊