புதன், அக்டோபர் 02
வாசிக்க: 2 சாமுவேல் 16:1-4, 19: 24-30
மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான். (2 சாமுவேல் 19:30)
பெலிஸ்தரோடு நடந்த போரில் தன் தகப்பன் யோனத்தான், பாட்டன் சவுல் மரித்தபோது மேவிபோசேத்துக்கு ஐந்து வயது. அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடும்போது தவறுதலாக கீழே போட்டதால், அவன் இரு கால்களும் முடமாயின. தாவீது அரியாசனத்தில் அமர்ந்தபோது, மேவிபோசேத்தின் சுதந்தரத்தை அவனுக்குத் திரும்பக் கொடுத்தான்; சீபாவை அவனுக்கு வேலைக்காரனாக வைத்தான்; தன் மேசையில் அமர்ந்து தினந்தோறும் தன்னோடு போஜனம்பண்ணுகின்ற பாக்கியத்தையும் கொடுத்தான். மேவிபோசேத் உயர் குணம் மிக்கவன். அப்சலோமிடமிருந்து தாவீது தப்பி ஓடும்போது, சீபா அவனிடம் மேவிபோசேத் தாவீதுடன் போகாமல் எருசலேமில் இருக்கிறான், இனி பாட்டனின் அரியாசனம் தனக்கு வரும் என எண்ணுகிறான் என்கின்ற பொய்யைச் சொன்னான். ஆனால், தாவீது எருசலேமுக்கு மீண்டும் வந்தவுடன், எருசலேமை விட்டு அவன் போனபோது, தான் வராததற்குக் காரணம் என்னவென உண்மையைச் சொன்னான் மேவிபோசேத் - ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான். நான் முடவனானபடியால் ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, ராஜாவோடுகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன். (2 சாமுவேல் 19:26) அவனிடம் சீபாவோடு நிலத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி தாவீது சொன்னான். அதற்கு இவன் சொன்ன பதில் ஆச்சரியப்படுத்துகிறது! ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளட்டும் என்றான்! அவனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த நிலங்களை ஏமாற்றுக்கார வேலைக்காரன் சீபாவோடு பகிர்ந்து கொள்ளும்படி தாவீது கூறியதால், தாவீதின்மீது மேவிபோசேத்துக்கு கசப்பு எளிதில் உண்டாயிருக்கவேண்டும்! அதற்கு மாறாக, ராஜாவின் தாராள மனதினால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதலை அவன் நினைத்துப் பார்த்தான். அவனுக்கு மிகப் பெரிய சந்தோஷம், ராஜா திரும்பவும் வந்ததுதான்! தாவீதின்பேரில் அவனுக்கிருந்த அன்பும், விசுவாசமும் எத்தனை பெரியது! அவனுக்கு ராஜா மட்டும்தான் வேண்டும்,சொத்துசுகம் வேண்டாம்!
அன்பானவர்களே, நாம் தவறாய் நடத்தப்பட்டாலும், நம் உரிமை பறிக்கப்பட்டாலும், மேவிபோசேத்போல இருப்பது நல்லது. அன்பும், சமாதானமும், நன்றியறிதலும் உண்டாகும்படிக்கு நாம் எல்லா முயற்சிகளைச் செய்யவேண்டும்.
ஜெபம்: ஆண்டவரே, தாவீது தனக்கு எவ்வளவு இரக்கம் பாராட்டி, தன்னைப் பராமரித்தான் என்பதை மேவிபோசேத் நினைத்து, தாவீதின் முடிவு தன் உரிமையைப் பறித்தபோதிலும், அதற்கு அடிபணிந்தான். நானும் மேவிபோசேத்தின் உதாரணத்தைப் பின்பற்றி, பிறரிடத்தில் கிருபையாயிருப்பேன். ஆமென்.
Comentarios