top of page

மாறாத அவரது அன்பு பெரியது!

செப்டம்பர் 24 வாசிக்க: யோபு 42:10-17


அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். (புலம்பல் 3:32)


சில நேரங்களில், நம் கிறிஸ்தவ வாழ்வில் நாம் கஷ்டங்களை சந்திக்கும்போது உடைந்துவிடுகிறோம். ஆனாலும் நாம் உற்சாகமடைவோம்; நம் கஷ்டங்களுக்கு நிச்சயம் ஒரு முடிவு உண்டு. நம் ஆண்டவர் என்றென்றைக்கும் மனுஷரைக் கைவிட்டுவிடுகிறவரல்ல. (புலம்பல் 3:31) யோசேப்பு இளைஞனாயிருந்தபோதே பாடுகளின் வழியே கடந்து சென்றான். பதின்மூன்று ஆண்டுகள் அவன் வாழ்வில் பிரச்சனைகளுக்குமேல் பிரச்சனைகள்; ஆனாலும் ஆண்டவர் அவனைக் கைவிடவில்லை. ஒரு நாளில் எகிப்து தேசத்தின் உயர் பதவியில் அவனை அமர்த்தினார். யோபுவும் பல இன்னல்களையும் இழப்புகளையும் சந்தித்தான்; அவனது பாடுகளும் ஒரு நாள் முடிவுக்கு வந்தன. கர்த்தர் தமது அளவற்ற அன்பை அவன்மேல் சொரிந்ததோடு, அவனை முன்னிருந்ததைக்காட்டிலும் இரண்டு மடங்கு ஆசீர்வதித்தார். (யோபு 42:12) அதற்குப் பிறகு அவன் நீடிய ஆயுளோடு வாழ்ந்து தன் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் கண்டான்.


அன்பானவர்களே, வியாதி மற்றும் பாடுகளின் பள்ளத்தாக்கில் நடக்க நேரிடும்போது நமது ஆவிக்குரிய கண்களைத் திறந்து, கிருபையுள்ள தேவன் நம்மோடு நடப்பதை நாம் பார்க்கவேண்டுமே தவிர மாம்சக் கண்களால் பிரச்சனைகளையே பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. யோசுவா 1:5ல், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். மேலும், உபாகமம் 31:6ல், நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடே கூட வருகிறார்; உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என அவர் வாக்குப் பண்ணியிருக்கிறாரே! வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர். எனவே, அவரது பொய்க்காத அன்பின்மேலும் அவரது வாக்குத்தத்தங்களின் மேலும் நாம் சார்ந்துகொண்டு நமது சூழ்நிலைகளைச் சந்தித்து, அவைகளை மேற்கொண்டு வெற்றியுடன் வெளிவருவோம்.


ஜெபம்: தேவனே, நான் பாடுகளின் வழியாக நடக்கையில், உம்மை நம்பி, உமது வல்லமையைச் சார்ந்துகொண்டு உமது கிருபையைப் பெற்று விசுவாசத்துடன் முன்னேறி வெற்றிபெற எனக்கு உதவிடும். உமது முடிவில்லா அன்பு என்னைத் தாங்கட்டும். உமது கிருபை என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும். ஆமென்.

留言

評等為 0(最高為 5 顆星)。
暫無評等

新增評等
bottom of page