செப்டம்பர் 27 வாசிக்க: ரோமர் 3: 19-26
நீதிமான் பனையைப்போல் செழி(ப்பான்). (சங்கீதம் 92:12)
வேதம் இரண்டு மரங்களைப் பற்றி இந்த நாளின் வசனத்தில் பேசுகிறது. ஒன்று கேதுரு! இன்னொன்று பனை! நீதிமான் இந்த இரண்டு மரங்களைப்போல செழிப்பான் என்று நாம் வாசிக்கிறோம். எந்த ஒரு மனிதனும் தன் சுயமுயற்சியினால் நீதிமானாக்கப்படுவதில்லை. எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. (ஏசாயா 64:6) நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என ரோமர் 3:10 கூறுகிறது. எல்லோரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23,24) தேவ கிருபையால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம்.
அன்பு நண்பர்களே, இயேசுகிறிஸ்து அந்தகாரத்திலும் பாவத்திலும் அமிழ்ந்துகிடந்த நம்மைத் தேடிவந்தார்; நம்மை இரட்சித்து, நீதிமான்களாக்கினார். ஆனால் இரட்சிப்போடு காரியம் முடிவதில்லை. அனுதினமும் நாம் ஆவிக்குரிய காரியங்களில் வளரவேண்டியவர்களாயிருக்கிறோம். வேதம் ஏன் ஒரு நீதிமானின் வளர்ச்சியைப் பனைமரத்தோடு ஒப்பிடுகிறது? சூழ்நிலைகளில் பாதகம் ஏற்பட்டாலும் பனைமரத்தின் வளர்ச்சி குறைவுபடுவதில்லை. கொடிய வறட்சியிலும் அது வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. மட்டை காய்ந்து விழுந்துவிட்டாலும்கூட புது துளிர்விட்டு அது தழைக்க ஆரம்பிக்கிறது. அவைகளின் வேர் பூமியில் உறுதியான பிடிப்புடன் இருப்பதால் பனைமரங்கள் புயலடித்தாலும் அவ்வளவு சுலபமாக விழுந்துவிடுவதில்லை. நாமும் நீதிமான்களாய் வாழ்ந்தால் இந்தப் பனையைப்போல உறுதியாக நிற்போம். நமது ஆவிக்குரிய வளர்ச்சி எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்படாது. நம் ஆண்டவர் நமது தேவைகள் அனைத்தையும் எந்நாளும் சந்திப்பதால் மகா வறட்சியான நாட்களிலும் நாம் செழிப்பும் பசுமையுமாக இருப்போம்.
ஜெபம்: அன்பின் ஆண்டவரே, நான் பாவியாயிருந்தபோதே நீர் என்னைத் தேடிவந்து இரட்சித்தீர். உமது இரத்தம் என்னைக் கழுவி என்னை நீதிமானாக்கியது. நன்றி ஆண்டவரே! எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் நான் என்றும் வளர, உம்மில் நான் உறுதியாய் வேர் ஊன்றக் கிருபை தாரும். ஆமென்.
Comments