புதன், மார்ச் 26 || அவர் என்மேல் கரிசனையோடு இருக்கிறார்!
- Honey Drops for Every Soul
- Mar 26
- 1 min read
வாசிக்க: எரேமியா 29: 11-13
... உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. - மத்தேயு 10:29
இயேசு, தமது போதகத்தில் பரமபிதாவுக்குத் தெரியாமல், அவரது அனுமதி இல்லாமல், இலவசமாகக் கொடுக்கப்படும் விலையற்ற ஒரு அடைக்கலான் குருவியும் தரையிலே விழுவதில்லை என்று கூறினார். அப்படியிருக்கையில் தமது சாயலில் தாம் படைத்த தமது பிள்ளைகளைக் குறித்த கரிசனை அவருக்கு இருப்பது அதிக நிச்சயமல்லவா! நமது இக்கட்டில் நாம் அவரைத் தேடும்போது, அவர் அதற்கு முன்பதாகவே நம்மைப் பாதுகாக்கும்படிக்கு நமக்கு அருகில் வந்துவிடுகிறார். நமது பரம தகப்பனின் நினைவில் நாம் எப்போதும் இருப்பதால், அவரது பார்வையில் நாம் விலையேறப்பெற்றவர்களாக இருப்பதால் நமது தலையிலிருக்கும் முடியையும் அவர் எண்ணியிருக்கிறார். அவர் அறியாமல் அவற்றை அவர் கீழே விழவிடுவதில்லை. எனவே, நாம் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை.
அன்பானவர்களே, காரியம் இப்படியிருக்கையில் மிகச் சாதாரண விஷயங்களுக்குக்கூட நாம் கவலைப்படுவது தேவையற்ற ஒன்றாயிருக்கிறது. நமது பரம தகப்பனும், நமது இரட்சகர் இயேசுவும் நம்முடன் இருக்கையில் நமது தோல்விகள், நமது வேதனைகள் மற்றும் நம்மை உடைக்க நினைக்கும் காரியங்கள் எதையும் தேவசித்தமில்லாமல் நமது வாழ்வில் அனுமதிப்பதில்லை என்பதை நாம் அறிந்துகொண்டோமானால் அவற்றை நாம் சகிப்பதுடன், அவர் நம்மை விடுவிப்பதையும் வெகு சீக்கிரத்தில் அனுபவிப்போம். எனவே, நம் தேவன் நம்மை மறந்துவிட்டார் என்றோ நம்மைக் கைவிட்டுவிட்டார் என்றோ நாம் ஒருபோதும் நினைக்கவோ சொல்லவோ வேண்டாம். அவர் நம் வாழ்வில் அனுமதிப்பதெல்லாம் அவரது அனந்த ஞானத்தின்படியே நமது நன்மைக்கென்றே அனுமதிக்கப்படுகின்றன. அவர் நம்மேல் கரிசனை காட்டி நம்மை குணமாக்குவார்; நம்மை ஆசீர்வதிப்பார்.
ஜெபம்: ஆண்டவரே, என்னைக்குறித்த சகலத்தையும் நீர் அறிந்திருக்கிறீர் என்ற நினைவே எனக்கு மிகுந்த ஆறுதலளிக்கிறது. நான் இழந்ததையெல்லாம் நீர் எனக்குத் தரவல்லவர் என்று நான் விசுவாசித்து என் கவலைகளையெல்லாம் உம்மிடம் விட்டுவிடுகிறேன். பொறுப்பெடுத்துக்கொள்ளும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Yorumlar