புதன், மார்ச் 19 || சோதிக்கப்படுவது பாவமல்ல, அதில் சரணடைவது பாவம்!
- YHWH With Grace
- Mar 19
- 1 min read
வாசிக்க: யாக்கோபு 1: 12-16
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்... - மத்தேயு 6:13
ஒரு மீனை எடுத்துக்கொள்ளுங்கள். தூண்டில் இரையை உணவென்று நினைத்து அதை நோக்கிப் போகிறது, ஆனால் தூண்டிலில் சிக்கி, முடிவில் தன் உயிரை இழந்துபோகிறது. சோதனையும் அப்படித்தான். நற்செயல்களைவிட, பாவம் செய்வதே நமக்குத் திருப்தி தரும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தூண்டிலில் நம்மைச் சிக்கவைத்து, அழிவுக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும். தேவ பிள்ளைகளாகிய நாம், தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்பினால், உலகிலிருந்து வரும் சோதனைகளை எதிர்த்து நிற்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் அதை வரவேற்று, அதிலே நிலைகொண்டு, மகிழ்வுற்றால், அது பாவமாய் மாறுகிறது. நமக்கு வேதனை உண்டாக்கின ஒருவரைப் பழிவாங்கவேண்டும் என்ற சோதனை வரும்போது, எப்படி அவரைப் பழிவாங்குவது என்று சிந்தித்து அதை செயலாக்கும்போது அது பாவமாக மாறுகிறது. இந்த சோதனையை நாம் முதலிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும்; மாறாக அந்த எண்ணத்தை வளரவிட்டால், அது நம் அழிவுக்கு நேராக நடத்திவிடும். ஒரு கான்க்ரீட் சுவரிலே ஒரு சிறிய செடி வளரத் தொடங்கினால் அந்த கான்க்ரீட்டையே அது உடைத்து விடுகிறது. முதலில் ஒரு சிறு விதையாக வெடிப்பில் விழுகிறது. பிறகு, விதையில் உள்ள உயிர், பெரிய மரத்தை உருவாக்குகிறது. அது கொஞ்சங்கொஞ்சமாய் வளர்ந்து, கான்க்ரீட் சுவரையே உடைத்துவிடுகிறது!
அன்பர்களே, நாம் வஞ்சிக்கப்படக் கூடாது. பாவத்தின் தூண்டிலில் நாம் விழுந்துவிட்டால், கொஞ்சங்கொஞ்சமாக அது மரணத்துக்குள் நடத்திவிடும். பரிசுத்த ஆவியிலும், தேவ வார்த்தையிலும் நாம் சார்ந்துகொண்டால் மட்டுமே, நம்மால் சோதனையை எதிர்த்து நின்று, மேற்கொள்ள முடியும். நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து நமக்குச் சிறந்த மாதிரியாக, ஆசிரியராக இருக்கிறார். நம்மைப்போல பலவிதங்களில் அவர் சோதிக்கப்பட்டும், ஒருபோதும் பாவம் செய்யாதிருந்தார். (எபிரெயர் 4:15)
ஜெபம்: ஆண்டவரே, பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவை பாலிய இச்சைகளுக்கு விலகியோடும்படி அறிவுறுத்தினார். பாவம் செய்யத் தூண்டும் ஜனங்களுடன் தவறான இடத்துக்கு போக நான் என்னை அனுமதிக்கமாட்டேன். பரிசுத்த ஆவி, தேவ வார்த்தையில் நான் சார்ந்துகொண்டு, வரும் சோதனையை முதலிலேயே தடை பண்ணிவிடுவேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments