புதன், மார்ச் 12 || அழிவுக்கு முன்னால் வருவது பெருமை
- Honey Drops for Every Soul
- Mar 12
- 1 min read
வாசிக்க: அப்போஸ்தலர் 20: 22-34
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். - லூக்கா 14:27
தம் சீஷர்களான நமக்கு இயேசு கொடுக்கின்ற கட்டளை: உன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொள் என்பதே! பிரச்சனை என்னவென்றால் இந்த வார்த்தைகளை நாம் அநேக ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டே இருப்பதால், நம்மிடம் அது தன்னுடைய உண்மையான அர்த்தத்தை இழந்துவிடுகிறது! நம் பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றையோ, நமக்கு தொல்லை தரும் நபரையோ நாம் சகிக்க நேரும்போது, இதுதான் நான் சுமக்கும் சிலுவை, என்கிறோம். இந்த வார்த்தைகளை இயேசு சொல்லிய நாட்களில், சிலுவை என்பது மரண தண்டனை கொடுக்கின்ற கருவியாக இருந்தது. கொடுமையான, கடும் வேதனை தரும் உடல் ரீதியான தண்டனைக்கு ரோமர் பயன்படுத்தின கருவி சிலுவை. சிலுவையை நினைத்தாலே, அது தேச மக்களுடைய முதுகெலும்பை நடுங்கச்செய்யும். இந்த வசனம் சொல்லப்பட்ட சூழல் என்னவென்றால் - இயேசு தம் சீஷர்களிடத்தில், தாம் யூத மதத் தலைவர்களால் தள்ளப்பட்டு, பல பாடுகளைப் பட்டு, கொல்லப்படுவார் என்று சொன்ன சூழலே. (லூக்கா 9:22) அவர் சொன்னதற்காக அர்த்தம் - என்னைப் பின்பற்றிவர நீங்கள் விரும்பினால், நீங்களும்கூட மரிப்பதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பதே! அது நம்முடைய சரீர மரணமாகவோ, நம் அதிகாரம், நம் கௌரவம், நம் அந்தஸ்து, நம் நிலை இவற்றின் மரணமாகவோ இருக்கலாம். கிறிஸ்துவோடுகூட நம்மை அடையாளப்படுத்த வேண்டுமென்றால், நம் சுயத்துக்கு நாம் மரிக்கவேண்டும். மற்றவர்களுக்கு முன்னுரிமை தரும்படிக்கு நாம் தன்னலமற்றவர்களாய் நம் முன்னுரிமைகளை விட்டுவிட வேண்டும். சுயத்துக்கு மரிப்பது என்பது கிறிஸ்தவ வாழ்விலே ஒரு பங்கு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அன்பானவர்களே, இயேசுவின் அழைப்பு நம் பயத்துக்கு அப்பாற்பட்டது. அதாவது, உபத்திரவம், பகை, விரோதம், நிராகரிப்பு, அவமானம், வேதனை, ஏன் மரணத்தையும்கூட நாம் சகிப்பதற்கு தயாராயிருக்கவேண்டும். இயேசு இங்கே மகிழ்ச்சியான அனுபவத்தைக்குறித்துப் பேசவில்லை, மாறாக அவர் பாடுபடுவதைக்குறித்தே பேசினார். சுவிசேஷத்துக்காக நாம் பாடுபட, நம் ஜீவனைக் கொடுக்க தயாராயிருக்கிறோமா? பாடுகளைத் தேடவேண்டாம், ஆனால் நம் பாதையில் பாடுகள் வந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும். சிலுவையின்றி கிரீடம் இல்லை என்பதை நம் நினைவில் வைப்போம்!
ஜெபம்: ஆண்டவரே, பாடுபட, சுயத்துக்கு மரிக்க, உலக மேன்மையைத் தள்ள, உபத்திரவம், நிராகரிப்பு, அவமானத்தை உமக்காக ஏற்றுக்கொள்ள நான் ஆயத்தப்படுவேன். சிலுவையைச் சுமந்து, உமக்குக் கீழ்ப்படிந்து, தினமும் உம்மைப் பின்பற்ற, பரிசுத்த ஆவியால் என்னைத் தகுதிப்படுத்தும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments