top of page

புதன், மார்ச் 05 || பாவமற்ற தேவ ஆட்டுக்குட்டி - இயேசுவே!

வாசிக்க: யாத்திராகமம் 12:1-11


நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

2 கொரிந்தியர் 5:21


கிறிஸ்துவானவர் பாவமற்றவர்! இப்பூமியில் வாழ்ந்த நாளில், பூரணமான நீதிமானாயிருந்தார். கறைதிரையற்றவராய், பரிசுத்தராய், பழுதற்றவராய் இருந்தார். என்றென்றைக்கும் அவர் தவறிழைக்கவில்லை, தேவனின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றாதிருக்கவில்லை, கொஞ்சம் கூட தேவ சித்தத்திற்கு புறம்பாய் செயல்பட்டதில்லை. பாவம் நிறைந்த உலகில் அவர் வாழ்ந்தபோது, என்றுமே பாவத்தால் கறைபடவில்லை. அவர் முழு வல்லமையுடன் வந்த சோதனைகளையும், சாத்தான் அவர்மீது எறிந்த அனைத்தையும் நேருக்குநேர் சந்தித்தார்; அதன் முழு பாரத்தையும் அவர் உணர்ந்தபோதிலும், ஒருபோதும் அதற்கு உடன்பட்டு, பாவம் தன் அருகில் வருவதற்குக்கூட விடவில்லை. இது நாம் அறிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான காரியம். கிறிஸ்து பாவம் செய்திருந்தால், அவரால் நமது இரட்சகராக இருக்கவே முடியாது. ஒரு பாவி வேறொரு பாவியினுடைய பாவத்துக்கான விலைக்கிரயத்தைச் செலுத்தமுடியாது. இதற்கான பலியை - இஸ்ரவேலரால் எகிப்து தேசத்திலே பஸ்கா தினமன்று அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியைப்போல - பழுதற்றவரும், கறைதிரையற்றவருமான ஒருவரால்தான் செலுத்த முடியும். (யாத்திராகமம் 12) பஸ்கா ஆட்டுக்குட்டி - உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி இயேசுவே என்று சித்தரிக்கிறது! (யோவான் 1:29) சிலுவையிலே பாவமற்ற இயேசு பாவத்தைச் சுமந்தார்! நீங்களும் நானும் செலுத்தமுடியாத விலைக்கிரயமான கடனை அவரே செலுத்தி முடித்தார்! எனவே, அவருடைய மரணம் தேவனுடைய நியாயப்பிரமாணமான, பாவத்திற்கான தண்டனையை நிறைவேற்றியது!  


  அன்பானவர்களே, உலகமானது தன் சுயஞானத்தினாலே தேவனை அறியாமலிருப்பதால், சிலுவை அவர்களுக்கு இடறலாயிற்று. (1 கொரிந்தியர் 1: 21) ஆனால், தேவன் தமது இரக்கத்தின்படி, சிலுவையில் செலுத்திய பலியால் தம் அன்பின் ஆழத்தை, வெளிப்படுத்தினார். சுவிசேஷத்தின் வல்லமையும், இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தமும் பாவியை சுத்திகரித்து, நீதிமானாக்குகிறது என்பதை சிலவேளை மறந்துபோகிறோம். இந்த வருடத்தின் லெந்து நாட்களில் நுழைகின்ற வேளையில், இந்த சத்தியங்களை நாம் சிந்தித்துப் பார்த்து, நம்மை இரட்சிக்க தேவன் செலுத்திய உன்னத பலிக்காக நன்றி செலுத்துவோம். 
ஜெபம்: ஆண்டவரே, உமது குமாரன் இயேசுவை எங்களை இரட்சிக்கும்படி அனுப்பினீர். அவர் பாவமற்றிருந்தும், எங்கள் பாவங்களைத் தம்மேல் சுமந்தார்; தாமே பாவமாகி எங்களுக்காக மரித்தார். நான் தாழ்மையுடன் சிலுவையின் பாதத்தண்டை வந்து, அந்த உம் அன்பிற்காக நன்றி செலுத்துகிறேன். ஆமென். 
 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page