புதன், நவம்பர் 27 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Nov 27, 2024
- 1 min read
வாசிக்க: ரோமர் 10:9-17
இரட்சிக்கப்படாதவர்களுக்காக கண்ணீருடன் ஜெபியுங்கள்!
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்...
- எரேமியா 9:1
இப்பூமியில் வாழும் மக்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் இன்னமும் இயேசுவைக் குறித்து ஒருவிசைகூட கேள்விப்பட்டதில்லை என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வெஸ்லி டூவல் என்பவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பின்வருமாறு கூறியிருக்கிறார். இந்தியாவிலுள்ள ஒரு வேதாகமக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் இருந்த நான், எனது மாணவர்களோடு கிராமம் கிராமமாகச் சென்று சுவிசேஷத்தை அறிவிப்பதிலும் கைப்பிரதிகளைக் கொடுப்பதிலும் அரையாண்டைச் செலவழித்து அவர்களைப் பயிற்றுவித்தேன். ஒரு இரவு நடந்த சுவிசேஷக்கூட்டத்தில் இயேசு பிறந்த நிகழ்ச்சியை லூக்கா 2ம் அதிகாரத்திலிருந்து நான் வாசித்தபோது வந்திருந்த ஒரு வயதானவர் குறுக்கிட்டு, ஐயா, கடவுளின் மகன் இந்தப் பூமியில் வந்து பிறந்து இப்போது எத்தனை நாள் ஆயிற்று என்று கேட்டார். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டது என்று நான் கூறியவுடன் அவர் இந்த சத்தியத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தது யார் என்று வினவினார். பதில்கூறமுடியாமல் தான் திகைத்துப்போனதாக வெஸ்லி தன் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இத்தனை ஆண்டுகளாக அந்த வயதானவர் இரட்சிப்படையாமல் இருந்ததற்கு ஆண்டவரா, நாமா? யார் காரணம்? நாம் சுவிசேஷம் அறிவிப்பதிலும், இரட்சிக்கப்படாதவர்களுக்காக ஜெபிப்பதிலும் நாம் மிகவும் குறைவுபட்டவர்களாக இருப்பதால்தான் இன்னும் அநேகர் இயேசுவை அறியவில்லை. இது எத்தனை வேதனையான காரியம்!
அன்பானவர்களே, இவ்வுலகத்தின் நிலை நம்மைக் கண்ணீரில் ஆழ்த்துகிறதா? இவ்வுலக மக்கள் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது நாம் கவலையற்றிருப்பது கிரிமினல் குற்றமாகும். அதுபோன்றே பாரமற்ற இருதயத்தோடு, கண்ணீரற்ற கண்களோடு, உதடுகளினின்று ஏறெடுக்கப்படும் மன்றாட்டும் குற்றமே! என்று ஒரு தேவதாசன் எழுதுகிறார். யோபு, துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டா? என சாட்சி கூறுகிறார். (யோபு 30:25) மோசே தம்முடைய ஜனத்தின் பாவத்திற்காக அழுதான். எரேமியா தன் மக்களுக்காக எப்போதும் அழுது புலம்பி விண்ணப்பம் பண்ணினபடியால் அவன் கண்ணீர் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டான். நாமும் கண்ணீருடனும் பாரத்துடனும் நமது குடும்பங்களிலுள்ள, நமது தேசத்திலுள்ள இரட்சிக்கப்படாத மக்களுக்காக பாரத்துடன் கண்ணீர் சிந்தி கர்த்தர் சமுகத்தில் ஜெபம் செய்வோம்.
ஜெபம்: தேவனே, உமது தெய்வீக அன்பினால் என் இருதயம் நிரம்பட்டும். உம் கிருபாசனத்துக்குமுன் மண்டியிடும்போதெல்லாம் கண்ணீருடன் பாரப்பட்டு ஜெபிக்க கிருபை தாரும். என் குடும்பத்திலுள்ள, என் தேசத்திலுள்ள இரட்சிக்கப்படாத பிள்ளைகளை நீர் கிருபையாக இரட்சியும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios