top of page

புதன், நவம்பர் 20 || தெளிதேன் துளிகள்

வாசிக்க:  1 யோவான் 4: 7-12


இயேசு நேசித்ததைப்போல நேசியுங்கள்!


உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்(ற)... ராஜரீக பிரமாணத்தை .. நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். - யாக்கோபு 2:8


கற்பனைகளிலே பிரதான கற்பனை எது என்று ஆண்டவரிடம் ஒரு வேதபாரகன் கேட்டபோது அவர், உன் தேவனாகிய கர்த்தரிடம் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்புகூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்று கூறினார். (மாற்கு 12:28-31) கர்த்தரிடம் அன்பு செலுத்த நம் அனைவருக்குமே ஆசைதான். ஆனால் மற்றவர்களை நேசிக்க நமக்கு விருப்பம் இருக்கிறதா? தான் கண்ட சகோதரனிடம் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான் என்று 1 யோவான் 4:20 கூறுகிறது. ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான் என்று 1 யோவான் 2:9ல் வாசிக்கிறோம். நமது சகோதர சகோதரிகளைக் குறித்தும், நமது உடன் ஊழியர்களைக்குறித்தும், அயலாரைக்குறித்தும் எத்தனை முறை அவர்களுக்குப் பின்னால் தவறாகப் பேசியிருக்கிறோம்.  நம்மைத் துன்புறுத்தி நிந்திக்கிறவர்களிடமோ, நாம் அன்புகூருவதென்பது நமக்கு இயலாத காரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், லூக்கா 6:35ல், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; என்று ஆண்டவர் இயேசு கூறியிருக்கிறார். மேலும் 32ம் வசனம், உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால் உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என்றும் அவர் கூறியிருக்கிறாரே! நம் எதிரிகளை நேசித்து அவர்களுக்கு நன்மை செய்வோமானால் நாம் பரமபிதாவிற்குப் பிள்ளைகளாயிருப்போம். அவர் நமக்குப் பலன் அளிப்பார்.


அன்பானவர்களே, நமது அன்பு நிபந்தனையற்ற அன்பாயிருக்கட்டும். நமது ஆண்டவர் இயேசு அன்பையும் மன்னித்தலையும் குறித்துப் பிரசங்கித்ததோடு நின்றுவிடாமல் அதை தன் வாழ்வில் நடைமுறையில் காட்டினார். அவர் தமது விரோதிகளை மன்னித்ததுபோல நாமும் நம்மை விரோதிப்பவர்களையும் நமக்குக் கெடுதல் நினைப்பவர்களையும் மன்னிக்க வேண்டும். இதனை நம் சுய பெலத்தினால் செய்யமுடியாது. அனைவரையும் நேசிக்கவும், மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் உதவும்படி தேவனிடம் கேட்போம்.

ஜெபம்: ஆண்டவரே, என் பிறனை நான் நேசிப்பது எனக்குக் கடினமாக இருக்கிறது. அதிலும் அவன் என்னை சீண்டுகையில் எனக்குக் கோபம்தான் வருகிறது. ஆனாலும் உம் வார்த்தையின்படி அவனை நேசிக்க எனக்கு உமது ஆவியின் பலத்தைத் தாரும். இயேசுவைப்போல் நான் வாழ உதவிடும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page