வாசிக்க: 1 தீமோத்தேயு 3:16
பரத்திலிருந்து இறங்கி நம்மோடு வாசம் செய்யும் தேவன்
... அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் .. இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். - மத்தேயு 1:23
உங்கள் அனைவருக்கும் எங்களது அன்பின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
வார்த்தை மாம்சமாகி தமது வாசஸ்தலத்தை நம்மோடு வைத்ததால் நாம் மகிழ்ந்து களிகூறுவோம்! அவர் இம்மானுவேல் என்றழைக்கப்படுகிறார், அதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். இம்மானுவேல் என்பது மாம்சமாய் வந்த கிறிஸ்துவின் அவதாரத்தைப்பற்றிப் பேசுகிறது. இம்மானுவேல் என்ற நாமம் அவர் மிகவும் அருகில் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. முடிவிலா பரிசுத்த தேவன், முடிவுள்ள பாவியான மனுஷனுக்கு மிக அருகாமையில் வந்தார். நாம் அவரோடு வாசம் செய்யும்படிக்கு, தேவன் நம்மோடு வாசம் செய்ய வந்தார். மனுஷகுமாரர்களாகிய நாம் தேவனுடைய குமாரர்களாகும்படிக்கு தேவகுமாரன் மனுஷகுமாரனாய் வந்தார். (1 யோவான் 3:1) எனவே, நாம் தேவனுடைய குமாரர்கள், குமாரத்திகளானோம்; இம்மானுவேலர் மூலம் நாம் கிருபாசனத்தண்டையில் இன்று தைரியமாகச் சேரமுடியும். (எபிரெயர் 4:16)
அன்பானவர்களே, அவர் நம் இம்மானுவேல், நம்மோடு இருக்கும் தேவன்; அவர் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் - ஜெயமோ, தோல்வியோ, துன்பமோ, ஏமாற்றமோ - எதுவாயிருந்தாலும் நம்மை விட்டு விலகுவதும் இல்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்குப் பண்ணியுள்ளார்! (எபிரெயர் 13:5) துன்பங்களிலிருந்து விடுதலையைக்காட்டிலும் நமக்கு அதிகத் தேவை, தேவன் இம்மானுவேலராக நம்மோடு துன்பத்தின் நடுவிலும் இருக்கிறார் என்று அறிவதே! உண்மையில் இம்மானுவேல் என்கின்ற நாமம் நம் பயத்துக்கான மாற்றுமருந்து - மோசே இஸ்ரவேலருக்கு ஞாபகப்படுத்திய - கர்த்தர் நம்மோடு இருக்கிறார் .. பயப்படவேண்டாம் என்பதே! (எண்ணாகமம் 14:9) எனவே, ஆபத்துக்கள் அச்சுறுத்துகையில் பேரிடர்கள் தாக்குகையில், இம்மானுவேல் நம்மோடிருந்து நம்மை ஆற்றித்தேற்றி அமைதிப்படுத்துவார் என்று உறுதியாக நம்புவோம். இம்மானுவேல் என்ற அவர் நாமத்தை நாம் தியானித்து, தைரியமடைவோம். உண்மையில் அவரது நாமம் அற்புதமான நாமம்! அவரது நாமத்தை தனிப்பட்டவிதத்தில் நன்கு அறிந்தவர்கள், அவர்மேல் நம்பிக்கை வைப்பார்கள் ஆண்டவராகிய அவர், தம்மைத் தேடுவோரை ஒருபோதும் கைவிடுவதில்லை! (சங்கீதம் 9:10)
ஜெபம்: ஆண்டவரே, உமது குமாரனை உலகத்துக்கு அனுப்பினதற்காக உமக்கு நன்றி. இம்மானுவேல், கர்த்தர் என்னோடு இருப்பதை நான் உறுதியாக நம்பி, ஆறுதலையும் சமாதானத்தையும் பெறுவேன். யார் என்னைக் கைவிட்டாலும், அவர் என்னை விட்டு விலகவோ, கைவிடவோ, தள்ளிவிடவோ மாட்டார். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments