top of page

புதன், டிசம்பர் 18 || தெளிதேன் துளிகள்


நம் ஆண்டவர் ஜீவனுள்ள தேவன்!


எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு... - 2 இராஜாக்கள் 19:19


அசீரியாவின் ராஜா சனகெரிப் ஒரு மிகப்பெரிய சேனையை தனக்கு எதிராக அனுப்பினான் என்ற செய்தியைக் கேட்ட யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் இருதயம் பயத்தால் கரைந்துபோனது. சனகெரிப் ஏற்கனவே யூதாவிலுள்ள நாற்பத்தி ஆறு பட்டணங்களைப் பிடித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்திருந்தான். மட்டுமல்ல, சமாரியாவையும் முற்றுகையிட்டு அதன் குடிகளையும் அடிமைப்படுத்தியிருந்தான். அதுமட்டுமன்றி, அவன் எசேக்கியாவிற்கு ஒரு கடிதம் எழுதி, எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே என்று சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான். அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு தன் தேவனுடைய ஆலயத்திற்கு சென்ற எசேக்கியா, கர்த்தரை நோக்கி, கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும் என்று விண்ணப்பம் பண்ணினான். சர்வவல்லவராகிய ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் ஒருவரே தன்னையும் தன் தேசத்தையும் தன் மக்களையும் காப்பாற்றி தங்கள் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தமுடியும் என்று எசேக்கியா நன்கு அறிந்திருந்தான். எனவே, அவரிடம் அவன் விண்ணப்பம் பண்ணி, நம்பிக்கையோடே காத்திருந்தான். நடந்தது என்ன? அவர் அவனது கூக்குரலுக்கு செவிகொடுத்து ஒரே இரவிலே, ஒரே ஒரு தூதனைக் கொண்டு ஒரு லட்சத்தெண்பத்தையாயிரம் பேரை அசீரியரின் பாளயத்தில் சங்கரித்தார்!

	அன்பானவர்களே, நாம் அனைவருமே பல எதிரிகளை நமது வாழ்வில் சந்திக்கவேண்டியிருக்கிறது. ஆனால் பல சமயங்களில் நம்முடைய எதிரிகள் வெளியிலிருந்தல்ல; நமக்குள்ளிருந்தே புறப்படுகின்றனர். உதாரணத்திற்கு, கட்டுப்படுத்தமுடியாத கோபம், பயம், கவலை, சந்தேகம் போன்றவை நம்மை முற்றிலும் அழித்துவிடும் அளவிற்கு நம்மைப் பயமுறுத்துகின்றன. பல சமயங்களில் இந்த எதிரிகளிடமிருந்து கடவுளாலும் நம்மைக் காப்பாற்றமுடியாது என நாம் எண்ணுகிறோம். அப்படியல்ல! நம் தேவன் ஜீவனுள்ளவர். எனவே, நாம் எசேக்கியா செய்ததைப்போல நமது பிரச்சனைகளை ஆண்டவருக்குமுன் வைத்து, அவரிடம் வேண்டுதல் செய்வோம். அவர் நம் ஜெபத்தைக் கேட்டு அற்புதம் செய்வார்.
ஜெபம்: கர்த்தாவே, என் எதிரியின் பலம் எத்தனை பெரிதானாலும், அதைக்காட்டிலும், என்னை நேசிக்கும், ஜீவனுள்ள தேவனாகிய நீர் வல்லமையுள்ளவர் என்று நான் அறிந்திருக்கிறேன். உம் நாம மகிமைக்கென்று என்னை என் எதிரிகளிடமிருந்து நீர் பாதுகாத்தருளும். ஆமென்

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page