top of page

புதன், டிசம்பர் 11 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: சங்கீதம் 45: 10-14


தோலளவே அழகு!


என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை. - உன்னதப்பாட்டு 4:7


அலங்கார உடைகள், அழகுப்பொருட்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டிருக்கும் காலம் இது. அழகான முகத்தோற்றம் மற்றும் கட்டான உடல் தோற்றம் இவைகளுக்காக எவ்வளவு பொருட்செலவும் செய்ய மக்கள் தயாராயிருக்கிறார்கள். வயதாவதை மறைக்க பலவிதமான க்ரீம்களையும், சிலவேளைகளில் வலிமிகுந்த அறுவை சிகிச்சைகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், 1 சாமுவேல் 16:7ல், மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்று கர்த்தர் கூறுகிறார்.

அன்பானவர்களே, மிகவும் வசீகரமாகத் தோற்றமளிப்பதோ, அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தி இல்லாததை இருப்பதைப்போல் காட்டுவதோ மெய்யான அழகல்ல. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள் என்று நீதிமொழிகள் 31:30ல், கூறப்பட்டிருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்மணி வெளிப்புற அழகைக்காட்டிலும் உள்ளான அழகே மேன்மையானது என்று அறிந்திருந்தாள். அதுமாத்திரமல்ல, தனது புறம்பான அழகு நிலைத்திராது என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. எனவே, அவள் கர்த்தரை நோக்கிப்பார்த்து, அன்பு, தாராளமனம், உத்தமம், இரக்கம், ஞானம், சாந்தம் ஆகிய குணங்களால் தன்னை அலங்கரித்தாள். அதனால் தேவனிடமிருந்தும் மனிதரிடமிருந்தும் பாராட்டுதலை அவள் பெற்றாள். பேதுரு, 1 பேதுரு 3:3,4ல், மயிரைப்பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது என்று கூறுகிறார். எனவே, நாம் நமது உடல் அலங்கரிப்பைக் காட்டிலும் ஆத்தும அலங்கரிப்புக்கு முக்கியத்துவம் தருவோம். அதுவே தேவன் விரும்பும் அலங்காரம்!  
ஜெபம்:  ஆண்டவரே, அலங்கரிப்புக்கும், படாடோபத்துக்கும் அடிமைகளாய் ஆகிப்போன மக்கள் கூட்டத்தின் நடுவில் வசிக்கும் எனக்கு, உள்ளான ஆத்துமாவை அலங்கரித்துக்கொள்வதே உமக்குப் பிரியம் என உணர்த்தினீர். நன்றி. அதை எப்போதும் நினனவில் கொள்ள எனக்கு கிருபை தாரும். ஆமென். 


தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page