top of page

புதன், ஜனவரி 29 || தெளிதேன் துளிகள்


ஊழியக்காரர்களுக்காக ஜெபியுங்கள்!


நான் தைரியமாய் .. சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு .. எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். - எபேசியர் 6:20


எந்த ஒரு கிறிஸ்தவனும் செய்யக்கூடிய மேலான ஊழியம் மன்றாட்டு ஜெபமே! கிறிஸ்துவின் போர்வீரர்கள் தங்கள் முழங்கால்களில் நின்றுதான் பல யுத்தங்களை ஜெயித்திருக்கிறார்கள். நாம் நமது முழங்கால்களில் நிற்கும்போதுதான் மரித்துக்கொண்டிருக்கும் இவ்வுலக மக்களுக்காக ஆண்டவர் தமது கரங்களை சிலுவையில் விரித்த காட்சியைக் காணமுடியும் என்று சாமி டிப்பிட் எழுதுகிறார். சாமுவேல் சாட்விக் என்னும் தேவமனிதர், தரித்து நிற்கும் ஜெபம்தான் மிகச் சாதாரண மனிதர்களையும் மிகப்பெரிய ஆற்றலுடையவர்களாய் மாற்றுகிறது என்று கூறுகிறார். கர்த்தருடைய ஜனங்கள் ஜெபித்தபோதுதான் எழுப்புதல் ஏற்பட்டது என்பது சரித்திரம். இன்றும் தமது முகத்தைத் தேடி ஜெபிப்பவர்களைத்தான் தேவ ஆவியானவர் உலகமுழுவதும் தேடிக்கொண்டிருக்கிறார். இந்த மகிமையான ஊழியம் பகட்டான ஒன்றல்ல. மூடிய அறைக்குள்ளே ஜெபிக்கிற மனிதனை கண்கள் காண்பதில்லை. ஆனாலும், நிச்சயமாக கர்த்தருடைய கண்கள் அவனைப் பிரியத்துடன் பார்க்கின்றன. பிரபலமான சுவிசேஷகர்களான டி எல் மூடி, பில்லி கிரஹாம் ஆகியோரை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், பின்னணியில் மறைவாக நின்று அவர்களுக்காக ஊக்கமாக மன்றாடுகிற ஜெபவீரர்களை நமக்குத் தெரியாது.

அன்பானவர்களே, நாமும் மற்ற எதையும்விட இப்படிப்பட்ட உன்னதமான மன்றாட்டு ஊழியத்தைச் செய்ய வாஞ்சிப்போம். திரளான ஜனங்களைக் கண்டு எப்படி நமது ஆண்டவர் இயேசு மனதுருகினாரோ அப்படி நாமும் இருந்தால்தான் நொறுங்கிய மனதுடன் நம்மால் அவர்களுக்காக அழுது மன்றாடமுடியும். அப்படி நாம் ஜெபிக்கும்போது ஆண்டவர் பதிலளித்து, சுவிசேஷத்தை தைரியமாக அறிவிக்க தமது ஊழியர்களைப் பயன்படுத்துவார்.
ஜெபம்: பிதாவே, உமது ஆவியின் உதவியால், எனது ஜெபம் தேசங்களை அசைக்கட்டும். சபையை எழுப்பட்டும்.  ஊழியர்களை உற்சாகப்படுத்தட்டும். எழுப்புதல் தீயை மூட்டட்டும். உமது இராஜ்யத்தைக் கட்டும் பணியில் என்னையும் ஒரு மன்றாட்டு ஜெபவீரனாக மாற்றும்.  ஆமென். 
 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page