புதன், ஜனவரி 22 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 22
- 1 min read
கர்த்தர் பயன்படுத்தும் மனிதர்கள்!
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில்.. உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
- சங்கீதம் 95:8
மார்ட்டின் லூத்தர், சார்லஸ் ஃபின்னி, சூசன்னா வெஸ்லி, ஜோனத்தான் எட்வர்ட்ஸ் என்பவர்கள் மகா பரிசுத்தவான்கள். டோசர் என்ற தேவமனிதர் சொல்கிறார்: மற்ற எதையும்விட கர்த்தரை அதிகம் நேசிப்பவர்களே தேவராஜ்யத்தில் மிகப்பெரியவர்கள். மேற்கூறப்பட்ட பரிசுத்தவான்கள் செய்ததெல்லாம் இந்த ஆவிக்குரிய சத்தியத்தை முக்கியப்படுத்தி முன்னேறியதுதான். ஒரு சராசரி மனிதன் கர்த்தர் தரும் உந்துதலைப் புரிந்துகொண்டாலும் அதைக்குறித்து எதுவும் செய்யாமலிருக்கிறான். ஆனால் ஆவிக்குரிய மக்களோ, ஆவியானவரின் சத்தத்தைக் கேட்டு உடனே அதன்படி நடக்க தன்னை அர்ப்பணிக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஒரு நாள் கர்த்தர் ஆபிரகாமிடம், உன் புத்திரனும் ஏகசுதனும் நேசகுமாரனுமான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்திற்குப் போய் நான் குறிக்கும் மலை ஒன்றில் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2) அடுத்த வசனத்திலேயே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, ஆயத்தங்களைச் செய்து முடித்து, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் என்று வாசிக்கிறோம். அதாவது அவன் தேவனிடத்தில் எந்த கேள்வியும் எழுப்பிக்கொண்டிருக்கவில்லை. அவரது சத்தத்திற்கு அப்படியே கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமானதை செய்ய அவன் நாடியது அவனது கீழ்ப்படிதலின் உச்சமல்லவா? அவனது கீழ்ப்படிதலினால் மிகவும் மகிழ்ச்சியுற்ற தேவன் அவனை மறுபடியும் அழைத்து, நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தார்.
அன்பானவர்களே, இன்று அவரது சத்தத்தைக் கேட்பீர்களானால் அவரது சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள். அவர் மகிழ்ந்து உங்களை ஆசீர்வதிப்பார்.
ஜெபம்: ஆண்டவரே, ஆவியானவரின் உந்துதலைப் புரிந்துகொள்ளும் ஆவிக்குரிய அனுக்கிரகத்தை எனக்குத்தாரும். அதற்கு அப்படியே கீழ்ப்படிந்து உம்மை சந்தோஷப்படுத்தி வாழ கிருபை தாரும். உம்முடனான எனது உறவு அனுதினமும் மேம்படுவதினால், ஆசீர்வாதம் பெற விரும்புகிறேன். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios