top of page

புதன், ஜனவரி 15 || தெளிதேன் துளிகள்


பயத்தை வெறுத்துத் தள்ளிவிடுங்கள்


தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.  (2 தீமோத்தேயு 1:7)



கடினமான சூழ்நிலைகள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது இயற்கையாகவே நமக்குள் ஒரு பயம் வருகிறது. ஆனால் பயம் என்பது விசுவாசத்திற்கு நேர் எதிரானது. பயம் நமது ஆவியைக் கலங்கப்பண்ணி, பாதுகாப்பற்ற நிலைக்குள் தள்ளிவிடுகிறது. ஆனால் விசுவாசமோ நமது ஆவியை உற்சாகப்படுத்தி நமக்கு அசையாத நம்பிக்கையைக் கொடுக்கிறது. இன்றைய வேதப்பகுதியில் நாம் எலிசாவைக்குறித்தும் அவனது வேலைக்காரனைக்குறித்தும் வாசிக்கிறோம். சீரியா ராஜாவின் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சூழ்ந்திருந்ததைக்கண்ட பயத்தில் அந்த வேலைக்காரன் உறைந்துபோனான். எலிசாவிடம் ஓடி, ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம் என்று  கூக்குரலிட்டான். ஆனால் தேவனுடைய மனுஷனாகிய எலிசாவோ சற்றும் அசரவில்லை. அவன் தன் மாம்சீகக் கண்களால் ராஜா அனுப்பிய இராணுவத்தை நோக்காமல், ஆவிக்குரிய கண்களால் தேவசேனை தங்களைச் சூழ்ந்திருந்ததைக் கண்டபடியால், பயப்படாதே; அவர்களோடிருப்பவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருப்பவர்கள் அதிகம் என்றான். பயம் என்பது நாம் அழையாமலே வந்துவிடும் ஒரு விருந்தாளி என்று யாரோ சொன்னார்.  ஆம்! கொஞ்சம் இடம் கொடுத்தாலும் உடனே நமக்குள் புகுந்து நம்மை அலைக்கழிக்கும் தன்மை இந்த பயத்துக்கு உண்டு. எனவே, நாம் பயத்துக்கு இடங்கொடுக்காமலிருப்பது அவசியம்.


1 இராஜாக்கள் 17ல், சாரிபாத் விதவை தன் எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையற்று நின்றபோது எலியா அவளது நிலையைக்கண்டு திகைக்காமல், கர்த்தர் அவளைப் போஷிக்கப்போவதை நினைத்து, பயப்படாதே என்று கூறினான். தாவீது அரசனும் கோலியாத்தைக் கண்டபோது பயப்படவில்லை. கர்த்தரை நம்பியதால் அவனைக் கொன்றான். 


நண்பர்களே, நாமும் நம் வாழ்வில் பயமுறுத்தும் சூழ்நிலைகளைச் சந்திக்கையில், கர்த்தர் போதுமானவர் என விசுவாசித்து, பயத்துக்கு இடம்கொடுக்காமல் தைரியமாக நின்றால் மேற்கூறிய தேவஜனங்களைப்போன்று நாமும் வெற்றிகொள்வோம். அதற்கு ஆவியானவரின் துணையை நாடுவோம்.



ஜெபம்: தேவனே, உன் தேவன் உன்னைக் கைவிட்டார் என்று பயம் எனக்குச் சொல்லும்போது, நான் துவண்டுவிடாமல், கர்த்தர் என்னை நேசிக்கிறார் , என்னைப் பாதுகாக்கிறார், என் தேவைகளைச் சந்திக்கிறார். ஆகையால் நான் பயப்படமாட்டேன் என்று விசுவாச அறிக்கையிட கிருபை தாரும். ஆமென்.
 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page