top of page

புதன், ஜனவரி 08 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: சங்கீதம் 62: 5-12


உம்மை நம்புபவர்கள் அசைக்கப்படுவதில்லை!


.. எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; ... தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். - சங்கீதம் 62:8


கர்த்தருடைய ஞானம், உண்மை மற்றும் தயவின்மேல் நாம் வைக்கும் அசையாத,  அமைதியான, நிச்சயமான நம்பிக்கையே நாம் சந்திக்கும் அலைஅலையாய் வரும் துன்பங்கள் மற்றும் சோதனைகளில் நம்மைக் காக்கிறது. தாவீது 125ம் சங்கீதத்தில் அழகாகக் கூறுகிறார்; கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் இருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். (வச. 1) உலகத்தின் மற்ற பர்வதங்கள் குலுங்கி அசையலாம்; ஆனால் கர்த்தர் அங்கே வாசம் செய்வதால் சீயோன் பர்வதம் என்றென்றும் நிலைத்திருக்கும். அப்படியே ஒரு விசுவாசியும் தனது முழு நம்பிக்கையை கர்த்தரின்மேல் வைக்கும்போது அசையாமல் நிலைத்திருப்பான். மற்றவர்கள் பீதியும் குழப்பமும் அடைந்து அலைகையில் இவனோ அமைதியாக, உறுதியாக, அசையாமல், பாதுகாப்புடன் இருப்பான். 

இப்படிப்பட்ட நம்பிக்கையைப் பெற நாம் செய்யவேண்டியது அவருக்கு நம்மை முழுமையாக ஒப்படைப்பதுதான். சங்கீதம் 37:5, உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று கூறுகிறது. கர்த்தரிடத்தில் ஒரு காரியத்தை ஒப்படைப்பது என்பது நமது பணத்தை எடுத்துச் சென்று நாம் வங்கியில் செலுத்துவது போன்றது. அதைச் செலுத்தியவுடன் நம் பணம் வங்கியின் பொறுப்பில் இருக்கிறது. நாம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களே அதனைப் பாதுகாத்து வைத்துக்கொள்கிறார்கள். அப்படியே, நாமும் ஆண்டவரது கரத்திற்குள் நமது வாழ்வின் காரியங்களைக் கொடுத்துவிடும்போது, அது அவர் வசத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. நமக்குக் கவலை தேவையில்லை. நமது உடல்சுகம்,  பிள்ளைகளின் எதிர்காலம், நமது பொருளாதாரம்,  எதுவாயினும் அவர் கரங்களில் தைரியமாக நாம் ஒப்படைக்கலாம். அவர் பார்த்துக்கொள்வார்.
ஜெபம்: தேவனே, என் வாழ்வை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். நீர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாகச் செய்வீர் என்று உம்மேல் என் முழு நம்பிக்கையையும் வைக்க எனக்கு கிருபை தாரும். என் கவலைகளை மறந்து; அசையாமல் உறுதியுடன் இருக்க உதவி செய்யும். ஆமென். 

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page