வாசிக்க: ஏசாயா 45: 1-5
நம்மை நடத்துபவரும் நம் வழிகாட்டியும் ஆண்டவரே!
நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ... வெண்கலக் கதவுகளை உடை(ப்பேன்). - ஏசாயா 45:2,4
ஏசாயா 45ம் அதிகாரத்தில் இந்த வார்த்தைகளை தேவன் பெர்சியாவின் ராஜா கோரேசுக்குச் சொன்னார். கோரேஸ் புறஜாதி ராஜாவாயிருந்தும், பாபிலோனிய சாம்ராஜ்யத்தைக் கவிழ்த்து, பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றி, சிறையிருப்பில் இருந்த இஸ்ரவேல் புத்திரரை மீட்டெடுத்து, அவர்களது சொந்த தேசத்துக்கு அனுப்பும் ஒரு குறிப்பிட்ட வேலைக்காகத் தேவன் தெரிந்துகொண்ட பாத்திரமாய் இருந்தான். கோரேஸ் இந்தப் பெரிய வேலையை தேவனுடைய உதவியின்றி செய்திருக்கவே முடியாது - ஏனெனில் பாபிலோனைப் பாதுகாக்க அநேகரும், அநேக உபகரணங்களும் இருந்தபடியால், எந்த விதத்தில் தாக்கினாலும் அதைத் தடுத்து நிறுத்த அதற்கு வல்லமையுண்டு! கர்த்தர் அவனுக்கு முன்னே போகாமல், வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறிக்காமலிருந்தால், அந்த மகா பாபிலோனை கோரேசால் பிடித்திருக்க முடியாது; அவன் முயற்சி முற்றிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கும்!
கோரேசுக்குக் கொடுக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தம் இந்தக் காலத்தில் நமக்கும் பொருந்தும். கோணலானவைகளைச் செவ்வையாக்கி, கரடுமுரடானவைகளைச் சமமாக்கி, மலைகள் குன்றுகளைத் தாழத்தள்ள வல்லவராகிய தேவனையே நாமும் சேவிக்கிறோம் என்பது நம்மை மிகவும் உற்சாகப்படுத்துகிறது! அத்தகைய வல்லமையும் பெலனும் நம் முன்னே, நம் பின்னே, நமக்கு உள்ளே இருப்பது நமக்கு மாபெரும் ஆறுதல் தருகிறது.
இந்த ஆண்டில் நாம் எப்பேர்ப்பட்ட கோணலானவற்றை, கரடு முரடானவற்றைச் சந்தித்தாலும், எத்தகைய வலுவான தாழ்ப்பாள்கள், கதவுகள் நம் பாதைக்குக் குறுக்கே நின்றாலும், தேவன் நம் பட்சத்தில் இருக்கிறபடியால் நாம் பயப்பட வேண்டாம். தேவனுடைய முகத்தை நோக்கிப் பார்ப்போம். மிகப் பெரிய வெற்றியைத் தரப்போகின்ற பாதையில் நம்மை நடத்தப்போவதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே! அவர் அப்படியே செய்வார். ஆமென்!
ஜெபம்: ஆண்டவரே, நீர் எனக்கு முன்னே போகிறீர். என்னை நடத்துபவராய் எனக்கு வழிகாட்டுபவராய் இருக்கிறீர். நான் முன்னேறும்படி என் பாதையை நீர் செவ்வையாக்குவீர்; கதவுகளைத் திறப்பீர், தாழ்ப்பாள்களை முறிப்பீர். எனக்காக நீரே யுத்தம் செய்வீர். இந்த வாக்குத்தத்தங்களை நான் இந்த 2025ம் ஆண்டிலே சொந்தமாக்கிக்கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments