top of page

புதன், ஏப்ரல் 09 || மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் நாம் உபவாசிப்போம்


வாசிக்க: மத்தேயு 6: 16-18



அவர்கள் ... அன்றைய தினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று ... சொன்னார்கள்.  

- 1 சாமுவேல் 7:6


அவ்வப்போது உணவைத் துறந்து, மாம்சத்தை ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே உபவாசம் எனப்படும். அநேகந்தரம் தேவ பிள்ளைகள் தேவனுக்கு முன்பாகத் தங்களை தாழ்த்த உபவாசிப்பார்கள்; அதன்மூலம் தங்களது வாழ்விலே தேவன் குறிப்பிட்ட விதத்தில் கிரியை செய்யவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். இயேசுகிறிஸ்து, உபவாசத்துக்கான விதிமுறைகளை நமக்குக் கூறியிருக்கிறார். முதலாவது அவர் சொல்வது; நீங்கள் உபவாசிக்கும்போது  மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப் பண்ணுகிறார்கள்; நீயும் அப்படிச் செய்தால், முழு பலனையும் அடைந்து தீர்ந்தாய். ஒன்றை நீ நிச்சயமாய் அறியவேண்டும் - மனுஷரால் போற்றப்படவேண்டும் என்று நீ உபவாசித்தால், உன் பிதாவின் புன்னகையை, அவர் தரப்போகின்ற பலனை நீ இழந்துவிடுவாய்! மனுஷருக்கு உன் உபவாசம் காணப்படாமல், உன் முகத்தோற்றத்தை மாற்றிக்கொள் - அப்போது உன் பிதா உனக்குப் பலனை அளிப்பார் என்பதே! வேதம் சொல்லுகின்ற உபவாசத்தில் எப்போதும் ஜெபம் இணைந்திருக்கிறது. உபவாசம் என்பது, தேவனைக் கட்டாயப்படுத்துவதற்கான, அவர்மூலம் காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்கான ஆவிக்குரிய உண்ணாவிரதம் என்று நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது. கர்த்தரின் சித்தத்துக்கு மாறான காரியத்துக்காக விண்ணப்பம் பண்ணினால், நமது உபவாசமோ அல்லது ஜெபமோ சாதகமான பதிலைத் தேவனிடத்திலிருந்து பெற்றுத்தராது! உபவாசத்தில் பாவ அறிக்கையும், மனந்திரும்புதலும் இணைந்திருக்கிறது. நாம் 1 சாமுவேல் 7:1-7ல், இஸ்ரவேல் தேசத்தின் எழுப்புதலுக்காக மன்றாடி ஜெபிக்கும்படிக்கும், ஜனங்கள் கர்த்தரிடத்தில் திரும்பவும், அறிக்கையிடவும் கூடவேண்டுமென்று அழைக்க, தேவன் சாமுவேலை எழுப்பினார். ஆட்டுக்குட்டியின் இரத்த பலி செலுத்தப்பட்டு, மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்த சமயம், இஸ்ரவேலர் பெலிஸ்தரை முறிய அடித்தார்கள்!


அன்பானவர்களே, நம் உபவாசம் உயிரற்ற வழக்கமான உபவாசமாக இருக்கக்கூடாது. மாற்றப்படாத  இருதயத்துடன் நாம் ஏறெடுக்கும் உபவாசம், உபயோகமற்ற செத்த கிரியைக்கு ஒப்பானது என்பதை நாம் ஒருபோதும் மறந்துபோகக் கூடாது. 
ஜெபம்: ஆண்டவரே, நான் உபவாசிக்கையில் என் கண்களை உமது மேலும், உம் சித்தத்தின்மேலும் பதித்து வைக்க உதவும். மற்றவர்கள் முன்பாக அல்ல, நான் அந்தரங்கத்தில் உபவாசிக்க உதவும். அறிக்கையிடுதல், மனந்திரும்புதலோடும், உம்மில் நெருங்கிச் சேரும் ஆவலோடும், மெய்யான ஜெபத்தோடும் என் உபவாசம் இருக்க நீர் எனக்கு உதவி செய்யும். ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page